தமிழகத்தை உலுக்கிய கள்ளச் சாராய மரணங்களும், 5 கேள்விகளும்!

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2 ஊர்களில் நிகழ்ந்துள்ள கள்ளச் சாராய மரணங்கள் மக்களிடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் என்னும் மீனவக் கிராமத்தில், கள்ளச் சாராயம் அருந்திய 13 பேர் பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர்த்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிராமங்களில் 5 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனர். விழுப்புரத்தில் 66 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தப் பகுதிகளில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள், சிபிசிஐடி-க்கு மாற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறுபுறம், தமிழகத்தில் சாராய ஆறு ஓடிக் கொண்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், கள்ளச் சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மரணங்கள் நிகழ்ந்த பிறகு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தாலும், இந்த கள்ளச் சாராய மரணங்கள் 5 கேள்விகளை எழுப்பி உள்ளன.

தூங்கிக் கொண்டு இருந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு: போதைப் பொருள்களை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கையாக, கடந்த ஆண்டு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவையும் ஒன்றாக இணைத்து ‘அமலாக்கப் பணியகம் - குற்றப் புலனாய்வுத் துறை’ என்னும் தனிப் பிரிவை தமிழக அரசு உருவாக்கியது. இந்தப் பிரிவு இத்தனை நாட்கள் என்ன செய்துகொண்டு இருந்தது என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ள தமிழக அரசு, முன்னதாகவே கள்ளச் சாராயத்தைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் வேகம் காட்டி இருந்தால் இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்காது.

உளவுத் துறையின் தோல்வி: மாநிலம் முழுவதும் இதுபோன்ற சட்ட விரோத செயல்பாடுகளை கண்காணித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதுதான் உளவுப் பிரிவின் முக்கிய பணி. மேலும், போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு, தனியே ஓர் உளவுப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தார். இந்த உளவுப் பிரிவினர் தங்களின் பணியை முறையாக செய்து இருந்தால் கள்ளச் சாராய விற்பனை தடுத்து இருக்கலாம். இவ்வாறு முறையாக கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளாத உளவுப் பிரிவு அதிகாரிகள் மீது தமிழக அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிர் பலி நடந்த பிறகு நடவடிக்கை: கடந்த 2 நாட்களாக தமிழக அரசு கள்ளச் சாராயம் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த வேட்டை தொடர்பாக, டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது." என்று தெரிவித்து இருந்தார். 2 நாட்களில் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க முடிந்த காவல் துறையால், இதை முன்கூட்டியே ஏன் எடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மரக்காணம் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்த நிலையில், அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று கூறி இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது” என்றார்.

அழுத்தம் கொடுத்த ஆளும் கட்சியினர்: விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, அருகில் உள்ள புதுச்சேரியிலிருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கொண்டுவரப்படுகின்றன. கூடவே, இந்தப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதில், தொடர்புடையோர் கைது செய்யப்படும்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் சிலர், அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாக மரக்காணம் பகுதி காவல் துறையைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அதிக இழப்பீடு தொகை: தமிழக அரசு, கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறது. கள்ளச் சாராயத்தின் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், அதை வேண்டுமென்றே அருந்தி இறந்தவர்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகையை அளிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதன் மூலம், கள்ளச் சாராயத்தின் ஊடுருவலைத் தடுக்கத் தவறிய காரணத்தால்தான் அரசு, பெரிய தொகையை இழப்பீடு அறிவித்திருக்கிறது என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தமிழக அரசு தனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்