கண்மாய்களில் மண் அள்ள எதிர்ப்பு: சிவகாசி குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

சிவகாசி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆர்.டி.ஓ விஸ்வநாதன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் லோகநாதன், ரெங்க சாமி, நேர்முக உதவியாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

முத்தையா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: வேளாண் அலுவலகத்தில் விவசாயிகள் தார்ப்பாய் வாங்கும்போது, கடப்பாரை மண்வெட்டி உள்ளிட்டவற்றை வாங்குமாறு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

ஆர்.டி.ஓ விஸ்வநாதன்: விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

அம்மையப்பன், பிள்ளையார்குளம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வடமலை குறிச்சி கண்மாயில் வனத்துறை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டிடம் மற்றும் முள் வேலியை அகற்ற வேண்டும்.

வட்டாட்சியர் ரெங்கசாமி: இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது.

முத்துராஜ், விழுப்பனூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்கு கனிமவளத் துறையில் 3 நாட்கள் அனுமதி பெற்று விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் அள்ளப்பட்டது. அப்போது கண்மாய்க்கு வந்த வட்டாட்சியர் டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால், முறைகேடாக செங்கல் சூளைக்கு மண் அள்ளுபவர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

அப்போது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் எழுந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் செங்கல் சூளைக்கு மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறைதீர் கூட்டத்திலிருந்து அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வெளியிடப்பு செய்தனர்.

இது குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதி ராமச்சந்திர ராஜா கூறுகையில், "கண்மாயில் மண் அள்ளும்போது கரையை சேதப்படுத்தக் கூடாது. மண் அள்ளுவதற்கு இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. 3 அடி ஆளத்திற்கு மேல் அள்ளக்கூடாது உள்ளிட்ட 21 விதிமுறைகள் உள்ளது. ஆனால் விதிகள் மீறி ஜேசிபி இயந்திரம் மூலம் 10 அடி ஆழத்துக்கு மேல் மண் அள்ளி செங்கல் சூளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீர் இருந்தும், நீர் மடை ஏறாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், செங்கல் சூளைக்கு மண் அள்ளியதால், ராஜபாளையம் முகவூர் கண்மாய், ஶ்ரீவில்லிபுத்தூர் பெரிய குளம் கண்மாயில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மண் அள்ளுவதற்கு தடை விதிக்க அதிகாரிகள் மறுத்ததால், அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்துள்ளோம்” என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE