விழுப்புரம்: "ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை என்பது கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக கொடுக்கப்படுவது அல்ல; சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பம் ஏழைக் குடும்பமாக இருக்கிறது. மீனவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களாக இருக்கின்றன. எனவேதான், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வழங்கினர். பின்னர் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இந்த 10 லட்சம் நிவாரண உதவி வழங்கியதற்கு எதிர்க்கட்சிகாரர்கள் ‘குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எல்லாம் ஏன் 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறீர்கள்?’ என்று கேட்கின்றனர்.
ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை என்பது கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக கொடுக்கப்படுவது அல்ல. சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பம் ஏழைக் குடும்பமாக இருக்கிறது. மீனவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களாக இருக்கின்றன. எனவேதான், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
நிவாரணத் தொகை வழங்குவதை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கும் கிடையாது; எங்களுக்கும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கள்ளச் சாராயங்கள் விற்பனை செய்யப்படக் கூடாது என்பதுதான் தமிழக முதல்வரின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக அவர் எடுத்து வருகிறார்" என்று அவர் கூறினார்.
» அதிவேக ரூ.100 கோடி வசூல்: மோகன்லாலின் ‘லூசிஃபர்’ சாதனையை முறியடித்த டோவினோ தாமஸின் ‘2018’
» செந்தில்பாலாஜிக்கு எதிரான வேலை மோசடி வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து ஒரு சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளது. அந்த விதிகளின் படி தான் நிவாரணம் வழங்கப்படும். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு விதிகளை விட அதிக நிதி உதவி அளிப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். மேலும், எதிர்பாராமல் நடந்த சில குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு நிதி உதவி அளிக்க விதிகள் இல்லை என்றாலும் அரசு முடிவு செய்து முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க முடியும்" என்றனர்.
குறிப்பாக, கள்ளச் சாராய சம்பவங்களைப் பொறுத்தவரையில், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகத்தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாகவும் அரசு உதவித் தொகையை அதிகரித்து வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது கவனிக்கத்தக்கது.
உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு: முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி அமரன் என்பவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, ஜிப்மர், புதுச்சேரி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர்உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியதில், ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம்: மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன், விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன், மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகிய 7 பேர் நேற்று முன்தினம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா, விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பிக்கள் பழனி, துரைபாண்டி நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மரக்காணம் தெற்கு விஏஓ சதாசிவம், கிராம உதவியாளர் முத்து ஆகியோரை திண்டிவனம் சார்-ஆட்சியர் கட்டா ரவி தேஜா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago