பதினெட்டு வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் கணவன் தாம்பத்ய உறவு கொள்வதும் பலாத்காரமே என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு பல தரப்பினரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
‘மனைவி 18 வயதுக்கு உட்பட்டிருந்தால், அவருடன் கணவன் தாம்பத்ய உறவுகொள்வதும் பலாத்காரமே’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியான தீர்ப்பை பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375-ல் சர்ச்சைக்குரிய 2-வது உட்பிரிவு, ‘ஒரு ஆண் தனது மனைவிக்கு 15 வயது நிரம்பியிருந்தால் அவருடன் தாம்பத்ய ரீதியாக உறவுகொள்வது குற்றம் ஆகாது’ என விதிவிலக்கு அளிக்கிறது. அதுவே, குழந்தைகள் திருமணத் தடைச் சட்டமும், பாலியல் வன்புணர்ச்சியில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டமும் ‘18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் பாலியல் உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம்’ என்கிறது.
ஆக, குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட போக்ஸோ சட்டத்துக்கு முரணாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு இருப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, 18 வயதுக்கு உட்பட்ட மைனர் மனைவியுடன் அவரது கணவர் தாம்பத்ய ரீதியாக உறவுகொண்டாலும் அதுவும் பலாத்காரமாகவே கருதப்படும். அவ்வாறு பாதிக்கப்படும் பெண், திருமணமாகி ஓராண்டுக்குள் புகார் அளித்தால் அந்த கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு சட்ட நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:
சரியான சவுக்கடி
21CHRGN_AJITHA பி.எஸ்.அஜிதா right
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர் பி.எஸ்.அஜிதா: 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திருமணம் செய்துகொடுப்பது கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதனால் அந்தச் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறாள். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக பாதுகாக்க போக்ஸோ சட்டம் உள்ளது. ஆனால், 15 வயதுக்கு மேற்பட்ட சிறுமி, ஒருவருக்கு மனைவியாகிவிடுகிற பட்சத்தில், அதே செயல் குற்றமாகாது என இந்திய தண்டனைச் சட்டம் இதுவரை விதிவிலக்கு அளித்து வந்தது. இந்தச் சட்ட முரணுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.
உண்மையைச் சொல்லப்போனால், உச்ச நீதிமன்றம் இப்போது சாட்டையை பெண்களிடம் கொடுத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பால் நாட்டில் உள்ள 10 சதவீத குழந்தைகள் பாதுகாக்கப்பட்டாலும் அது பெண்கள் சமூகத்துக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி. தவிர, இதுதொடர்பான விழிப்புணர்வு உடனே ஏற்பட்டுவிடாது. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியது. எனக்குத் தெரிந்து, இந்தத் தீர்ப்பு வந்த மறுநாளே ஒரு சிறுமியின் திருமணத்தை பெற்றோரே நிறுத்தியுள்ளனர். இதற்காக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். பழமையான பழக்க வழக்கங்களில் ஊறிப்போன நம் சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் ஒரேநாளில் வந்துவிடாது. அதை இன்றைய இளைய தலைமுறைதான் கொஞ்சம், கொஞ்சமாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். ஒரு சின்ன தீப்பொறிதான் மிகப்பெரிய புரட்சிக்கனலுக்கு வித்தாக அமையும். அந்த வகையில் இந்த தீர்ப்பு நிச்சயம் வரவேற்கத்தக்கது.
சிறைகள் பத்தாது
‘21ChRGN_Padam Narayanan பாடம் அ.நாராயணன்
மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர், குழந்தைகள் நல ஆர்வலர் பாடம் அ.நாராயணன்: உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் ஒட்டுமொத்தமாக பெண்கள் சமூகத்துக்கு நன்மை நடந்துவிடாது. இத்தீர்ப்பு ஒரு சிறு கருவி என்ற அளவில் வரவேற்கலாம். 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் நடந்து, அதன் மூலமாக நடைபெறும் பாலியல் ரீதியிலான உறவை வன்கொடுமையாகப் பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. குற்றம் என்று கூறி நடைமுறைப்படுத்தினால் சிறைகள் பத்தாது.
படிப்பறிவு இல்லாத ஏழைக் குடும்பங்கள், வாங்கிய கடனுக்காக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைத் திருமணம் செய்துகொடுப்பது வடமாநிலங்களில் இன்னும் தொடர்கதையாக இருக்கிறது. அதற்காக இதை சரி என்று கூறி அங்கீகரிக்க முடியாது.
முன்னோர் பால்ய விவாகம் செய்தனர். அது இப்போதும் ஏழ்மை என்ற வடிவில் நகர்ப்புற குடிசைப்பகுதி மக்களிடம் தொடர்கிறது. ஆனால் இப்போது உள்ள சட்ட விழிப்புணர்வு அப்போது கிடையாது. பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட இந்தியாவின் பல்வேறு சமூக மக்கள், பழங்குடியின, மலைவாழ் மக்களிடம் இருக்கும் சாதிய, சமூகப் பழக்க வழக்கங்களை, குற்றம் என்று கூறி ஒரேநாளில் தடுத்துவிட முடியாது. ஏனெனில், நம் சட்டத்தில் ஓட்டைகள் அதிகம்.
நம் நாட்டில் எப்போது 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாயக்கல்வி அளிக்கப்படுகிறதோ, எப்போது இங்கு வறுமைக்கோட்டுக்கு கீழே யாரும் இல்லை என்கிற நிலை வருகிறதோ அப்போதுதான் இதுபோன்ற தீர்ப்புகள் பெண் சமூகத்துக்கு 100 சதவீத பலன் அளிக்கும். அதற்காக, இத்தீர்ப்பை ஒரேயடியாக குறைகூறிவிட முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago