“என் அம்மாவையும், விவேகானந்தரையும் முன்னுதாரணமாக கொண்டு முன்னேறினேன்” - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: "ஏதோ படித்தோம், உயர் கல்வி முடித்தோம், வேலை வாங்கினோம் என்று இருக்காமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக உலகத்தில் திகழ வேண்டும். என் அம்மாவையும், விவேகானந்தரையும் முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறினேன்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கள்கிழமை (மே 15) அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடலின் போது பேசியதாவது: "மாணவிகள் உயர்ந்த லட்சியத்தோடு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும் அதற்கான நேர்மறை சிந்தனைகளும் கொண்டு முன்னேற வேண்டும்.எதிர்மறை சிந்தனைகள் எப்போதும் வேண்டாம். காலத்தை வீணடிக்காதீர்கள். காலம் சென்றால் வராது. ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது நோபல் பரிசு வாங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பயில வேண்டும். ஏதோ படித்தோம், உயர்கல்வி முடித்தோம், வேலை வாங்கினோம் என்று இருக்காமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக உலகத்தில் திகழ வேண்டும். என் அம்மாவையும், விவேகானந்தரையும் முன்னுதாரணமாக கொண்டு முன்னேறினேன்.

ஒருவர் மட்டுமல்ல பலரையும் முன்னுதாரணமாக கொண்டு திகழ வேண்டும். யார் யாரிடம் உயரிய பண்புகள் உள்ளதோ அதனை ஏற்றுக்கொண்டு நமது உயர்வில் தனித்தன்மை உடையவர்களாக திகழ வேண்டும். பெண்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் பயிற்சி பெற்றுத் திறம்பட வேலை செய்து முன் உதாரணமாக விளங்க வேண்டும். உலகம் வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு மாணவிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய கலாச்சாரத்தை உலகளவில் புகழ் பெறச் செய்ய வேண்டியது மாணவர்களின் கடமை" என்று அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது ஆளுநர், "பேராசிரியர்கள் நல்ல தரமான நூல்களை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும். பெண்கள் தன் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்திலும் பணியிடத்திலும் திறம்பட பணி செய்து வருகிறார்கள். பணிகள் மட்டும் செய்யாமல் உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை செலுத்த வேண்டும்" என அறிவுறுத்தல்களை வழங்கினார். இதன் பின், ஆளுநருடன் பேராசிரியர்கள், மாணவிகள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

நாளை போக்குவரத்து மாற்றம்: நாளை (மே 16) காலை 10 மணிக்கு ஆளுநர் கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக காரில் மதுரைக்கு செல்கிறார்.அம்மையநாயக்கனூர் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது ஓய்வுக்கு பின் பிற்பகல் 1 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்கிறார். ஆளுநரின் பாதுகாப்பு கருதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொடைக்கானல் -வத்தலக்குண்டு இடையே இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE