“கள்ளச் சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: "கள்ளச் சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளச் சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.கள்ளச் சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

கள்ளச் சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்றுள்ள கள்ளச் சாராய சம்பவங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்களை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். | வாசிக்க > கள்ளச் சாராய வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம்; விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE