லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ரூ.457 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த மே 11 மற்றும் 12ம் தேதிகளில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாக சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமலாக்கத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மே 11 மற்றும் 12ம் தேதிகளில், நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாக சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளது.

முன்னதாக, கோவையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மார்ட்டின். லாட்டரி விற்பனைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை இவர் செய்து வருகிறார். தவிர, கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார்.கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது. இதற்கருகே, அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.

இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் மே 11 மற்றும் 12ம் தேதிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கோவையில் 3 இடங்களிலும் இந்தசோதனை நடந்தது.கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, கார்ப்பரேட் அலுவலகம், கல்லூரியில் சோதனை நடத்தினர்.அதேபோல், சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மார்ட்டின் மருமகன் வீடு உள்பட மேலும் சில இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE