“கள்ளச் சாராய ஆட்சியாகத்தான் புதுச்சேரி அரசு உள்ளது” - காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “கள்ளச் சாராய ஆட்சியாகத்தான் புதுச்சேரி அரசு உள்ளது. கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கும், கடத்துவோருக்கும் புதுச்சேரி அரசு உறுதுணையாக உள்ளது” காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் இத்தீர்ப்பு பொருந்தும். இவை அனைத்தும் ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் இத்தீர்ப்பு பொருந்தும். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இதை மறுப்பு கூறியுள்ளார். இதிலிருந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பாக இருந்தாலும் அதை மதிக்கமாட்டேன் என்று அவர் பேசுவதை அறிய முடிகிறது. தனது அதிகாரம் பறிபோகக் கூடாது என்பதற்காக அதற்கான நடவடிக்கை எடுக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரியில் ஆளும் கூட்டமியிலுள்ள பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக ஆகிய கட்சிகள் இதை தட்டிக் கேட்காதது வேதனையளிக்கிறது. புதுச்சேரி காமராஜர் என தன்னை அழைக்கும் முதல் அமைச்சர் ரங்கசாமி, மதுபானக் கடைகளை ஊக்குவித்தால் அப்பெயரை பயன்படுத்தாதீர்கள். கமிஷன் ஆட்சியாக கர்நாடகத்தில் பாஜக மாறியதால் தூக்கியெறியப்பட்டது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தங்களை மதுபானக் கொள்கை, கமிஷனில் தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் தூக்கியெறிவார்கள்.

புதுச்சேரியில் மது கரைபுரண்டு ஓடுகிறது. கள்ளச் சாராயம் புதுச்சேரியில் காய்ச்சுவது ஆதாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கள்ளச் சாராயம் காய்ச்சும் இடத்தை கூட அரசு கண்டுப்பிடிக்கவில்லை. கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கும், கடத்துவோருக்கும் புதுச்சேரி அரசு உறுதுணையாக உள்ளது. கள்ளச் சாராய ஆட்சியாகாகத்தான் புதுச்சேரி அரசு உள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE