கர்நாடகாவில் பாஜக தோல்வி என்பது ஜனநாயகத்துக்கான வெற்றி: திமுக எம்.பி திருச்சி சிவா பேச்சு

By என்.சன்னாசி

மதுரை: கர்நாடக மாநிலத் தேர்தலில் பாஜகவின் தோல்வி என்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.

மதுரை சோழவந்தான் தொகுதி திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் வாடிப்பட்டியில் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது. மாவட்ட செயலாளர், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் துணைச் செயலர் ஆ.வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் மு.பால்பாண்டியன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியதாவது: "இதற்கு முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் மக்களிடம் வரி வாங்கிக் கொண்டார்கள், ஆனால் அந்த வரிப்பணம் கஜானாவிலிருந்து வேறு இடத்திற்கு சென்றதே தவிர மக்களுக்கான திட்டங்களாக மாறவில்லை. 10 ஆண்டுகாலம் மனு கொடுத்தால் பதிலில்லை, கோரிக்கை கொடுத்தால் கேட்க ஆளில்லை, போராட்டம் நடத்தினால் கைது செய்தனர். இதுதான் அதிமுக ஆட்சியில் நடந்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளிலேயே கோரிக்கை கொடுக்காமலே மக்களின் தேவை அறிந்து செயல்படுகிற ஆட்சி தான் திமுக ஆட்சி . கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியை இழக்க செய்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில், இந்த நாட்டை மதத்தின் பெயரால், வேறு பல காரணங்களால் மக்களை பிரிக்க நினைப்பவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படுவர்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பல சட்டங்கள் கொண்டு வந்தனர். இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படுத்தப்பட்டது” என்று திருச்சி சிவா கூறினார். மேலும், இக்கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் சம்பத், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நிறைவாக முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE