சர்ச்சை வீடியோக்கள் | சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி 4 அவதூறு வழக்குகள் தாக்கல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாக சவுக்கு சங்கருக்கு எதிராக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களில், ‘பல்வேறு யூடியூப் தளங்களுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசை, ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்ததைப் போல, நான் தமிழகத்தில் திமுக அரசை கவிழ்க்கப்போவதாக, எனக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பார்களை நான் நடத்தி வருவதால் என் மீது திமுகவினர் விரக்தியில் இருப்பதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல, ட்விட்டர் பக்கத்தில் எனக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். அரசியல் விரோதிகளின் தூண்டுதலின் பெயரில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் சவுக்கு சங்கரை அவதூறு சட்டப் பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும்’ என மனுக்களில் கோரியிருந்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த மனுக்களை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE