கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லை. தற்போது மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியுள்ளது. விழுப்புரம் சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக அரசின் அக்கறையின்மை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, கள்ளச்சாராயம், போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: டாஸ்மாக் மூலம் அதிக அளவில் மது விற்பனையாகிறது. அதேநேரத்தில், கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் திறமையின்மையால் இச்சம்பவம் நேரிட்டுள்ளது. எனவே, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை செயல்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் உறவு கொண்டுள்ள காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் அரசால் நடத்தப்படும் மது வணிகம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும். மது விலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரு.5 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் டாஸ்மாக் போதாது என்று, கள்ளச்சாராயமும் பரவலாக விற்கப்படுகிறது. மக்கள் மீது அக்கறையில்லாமல், மதுவால் கிடைக்கும் வருமானத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தமிழக அரசு, தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: டாஸ்மாக், போதைப் பொருட்களின் புழக்கம் ஆகியவற்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இந்தச் சூழலில், கள்ளச்சாராய விற்பனையும் சேர்ந்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கள்ளச்சாராயப் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தில், கள்ளச்சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடமையில் அலட்சியமாக இருந்த போலீஸார் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பது சரியான நடவடிக்கை. அதேநேரத்தில், கள்ளச்சாரய விற்பனைக்கு ஊக்கம் தருவது யார் என்பதையும், பொதுமக்களிடம் விற்பனை செய்வது வரை யார், யார் இணைந்துள்ளனர் என்பதையும் கண்டறிந்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

வி.கே.சசிகலா: கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாக இருந்த, திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை தடுக்க காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது, மிகவும் வேதனை அளிக்கிறது. சமூக சீர்கேடுகளுக்கு ஆதாரமாக விளங்கும் கள்ளசாராயத்தை ஒழிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்