டாஸ்மாக் நிறுவனம் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் - வழக்குத் தொடர அனுமதிக்க ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு

By செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல் தொடங்கி, சில்லறை விற்பனை வரை ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று புகார் தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இது தொடர்பாக வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த, சுமார் 250 பக்கங்கள் கொண்ட மனுவில் கூறியிருப்பதாவது: மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மது பாட்டில்களுக்கு எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து எவ்விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை.

கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மதுபானங்களில் 60 சதவீதத்துக்கு மட்டுமே ஆயத்தீர்வை வசூலிக்கப்படுகிறது. 40 சதவீத மதுபானங்களுக்கு எவ்விதமான ஆயத்தீர்வையும் வசூலிக்கப்படாமல், கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. மதுபான கொள்முதலில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெறுகிறது. ரூ 25 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

மதுபான உற்பத்திச் செலவுடன், பாட்டிலின் விலை, மூடியின் விலை, லேபிள் விலை என தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் அபரிமிதமாக விலை நிர்ணயம் செய்வதால், ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது.

மொத்தம் 19 ஆலைகளிலிருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும்போது, அது எல்லா ஆலைகளிலிருந்தும் சீராக கொள்முதல் செய்யப்படுவதில்லை. அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்திடமிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் உரிமையாளர், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 4,000 பார்கள் சட்டவிரோதமாக இயங்குகின்றன. இதன் வாயிலாக மாதம் ரூ.750 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை ஊழல் நடைபெறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்படுகிறது.

தமிழகத்தில் உரிமம் இல்லாமல் செயல்படும் ஆயிரக்கணக்கான மதுக்கூடங்களில் சராசரியாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரை, இடத்துக்குத் தக்கவாறு கள்ளத்தனமாக மது செய்யப்படுகிறது. இதன்மூலம் தினமும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேலாக, ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.50,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெறுகிறது. எலைட் பார்கள் அனுமதி மற்றும் விற்பனையில் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது.

டாஸ்மாக் பார்கள் உரிமத்தை, வெளிப்படையாக ஆன்லைன் டெண்டர் மூலம் வழங்க வேண்டும் என்பதே விதி. ஆனால், பாக்ஸ் டெண்டர் மூலமாக, பினாமிகளின் பெயர்களிலேயே பார்கள் டெண்டர் எடுக்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் பார் டெண்டர் மோசடியை விசாரிக்க தனி ஆணையத்தை நியமிக்க வேண்டும்.

கோடிக்கணக்கான மக்களின் உழைப்பைச் சுரண்டியும், சட்ட விரோதமாகமாகவும் ஒரு கும்பல் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் செய்து, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கிறது.

எனவே, இதில் தொடர்புடையவர்கள், மதுவிலக்கு துறை செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகள், டாஸ்மாக் உயரதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொரட அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த மோசடியை விசாரிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE