தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 13 ஆயிரம் செவிலியர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில், 2 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியும், 13,000 செவிலியர்களில் 10 ஆயிரம் பேரை இன்னமும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால், மகப்பேறு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு, இதர படிகள் கிடைக்காமல் அவர்கள் அவதியுறுகின்றனர். மேலும், ஊதியத் தொகை ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

உலக செவிலியர்கள் தினத்தன்று, தங்களுடைய 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அந்த அளவுக்கு அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். செவிலியர்களின் கோரிக்கைகளை கேட்கக்கூட திமுக அரசு தயாராக இல்லை. இதனால், செவிலியர்கள் பெரிதும் விரக்தி அடைந்துள்ளனர். இதற்காக, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் முன் தேதியிட்டுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE