கொடைக்கானலில் இன்று அன்னை தெரசா பல்கலை. மாணவிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 3 நாட்கள் பயணமாக விமானம் மூலம் நேற்று மதுரை வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பயணிகள் விடுதிக்கு கார் மூலம் வந்தடைந்தார்.

அங்கு, திண்டுக்கல் டிஐஜி அபினவ்குமார், எஸ்.பி.வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

வாகனங்களுக்கு தடை: அங்கு, சிறிது ஓய்வுக்குப் பின் ஆளுநர் கார் மூலம் கொடைக்கானலுக்குப் புறப்பட்டார். ஆளுநர் வருகையையொட்டி, நேற்று பிற்பகல் 2 மணி முதல் கொடைக்கானல் மலையிலிருந்து வாகனங்கள் கீழ் இறங்கவும், மேலே செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கொடைக்கானல் சென்றடைந்த ஆளுநரை, திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இன்று காலை கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் ஆளுநர் கலந்துரையாடுகிறார். அதையடுத்து, அப்சர்வேட்டரி மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிடும் ஆளுநர், இரவு கோஹினூர் மாளிகையில் தங்குகிறார்.

தொடர்ந்து, நாளை (மே 16) காலை கொடைக்கானலில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, மதியம் கொடைரோடு பயணியர் விடுதிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் சென்று சென்னை செல்கிறார்.

ஆளுநர் பயணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை காட்ரோடு- கொடைக்கானல் மலைச் சாலையில் வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE