மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணியை ஊக்கப்படுத்திய காவல் ஆணையர் - அசைவ விருந்து அளித்து அசத்தல்

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் மிக பிரசித்தி பெற்றது சித்திரைத் திருவிழா. இத்திருவிழாவையொட்டி, பல லட்சம் மக்கள் திரளுவது வழக்கம். இதற்கான பாதுகாப்பு என்பது காவல் துறைக்கு சவாலானது.

அவ்வகையில், இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் பாதுகாப்பு குளறுபடி எதுவுமின்றி அமைதியான முறையில் முடிந்தது.

இந்நிலையில், இத்திருவிழா பாதுகாப்பு பணியை இரவு, பகல் பாராமல் திறம்பட மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பாராட்டுவிதமாக ‘படாக் கான்‘ என்ற நிகழ்ச்சி ஆயுதப் படை மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் பாதுகாப்பு பணியை சிறப்பு செய்தமைக்கு துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டி நினைவு பரிசுகளை காவல் ஆணையர் நரேந்திரன் வழங்கினார்.

தொடர்ந்து, மைதானத்தில் ரேஞ்ச் வாரியாக மாநகர காவல்துறை சார்பில், ஆணையருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து காவல்துறையினரும் சைவ, அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை காவல் துறையினர் வியந்து பாராட்டியுள்ளனர்.

விழாவில் காவல் ஆணையர் பேசும்போது, ‘இத்திருவிழாவை பாதுகாப்பை தோளோடு தோளாக இணைந்து, இரவு, பகல், மழை, வெயில் பாராமல் பணி செய்தீர்கள். இந்த பாதுகாப்பு பணியில் உங்களுடன் இணைந்து பணி செய்தமைக்கு பெருமை கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் மற்றும் நமது காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது. உங்களை உள்ளம் மகிழ வாழ்த்துகிறேன்’ என்றார்.

விழாவில் ஆட்சியர் அனிஷ்சேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் கலோன், துணை ஆணையர்கள் சாய் பிரனீத், அரவிந்த், மங்களேசுவரன், ஆறுமுகசாமி, நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE