கோவை - மேட்டுப்பாளைம் 'மெமு' ரயிலில் நெருக்கடியில் பயணிக்கும் மக்கள்: கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

By க.சக்திவேல்

கோவை: கோவை - மேட்டுப்பாளைம் இடையிலான மெமு ரயிலில் 8 பெட்டிகளே இணைத்து இயக்கப்படுவதால், காலையும், மாலையும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பயணிகள் பயணித்து வருவதால், கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் காலை 9.35 மணி, 11.50 மணி, மாலை 3.45 மணி, 5.55 மணி, இரவு 8.25 மணி ஆகிய நேரத்திலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.20 மணி, காலை 10.55 மணி, மதியம் 1.05 மணி, மாலை 4.45 மணி, இரவு 7.15 ஆகிய நேரத்திலும் மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்கின்றன. கோவை-மேட்டுப்பாளையம் இடையே எந்த ரயில் நிலையத்தில் ஏறி இறங்கினாலும், இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. தினசரி இந்த வழித்தடத்தில் பயணிப்போர் ரூ.185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக்கொண்டும் பயணித்து வருகின்றனர்.

இதுதவிர, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். கோவை - மேட்டுப்பாளையம சாலையில் ஜி.என்.மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுவதால் பேருந்துகளில் செல்வது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கல்லூரி மாணவர்கள், கோவைக்கு அலுவலக வேலைகளுக்கு வந்துசெல்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் மெமு ரயிலில் அதிகம் பயணிக்கின்றனர்.

ஆனால், 8 பெட்டிகளை இணைத்து மட்டுமே தற்போது ரயில் இயக்கப்படுவதால், காலை, மாலை நேரங்களில் பயணிகள் நெருக்கியடித்து செல்ல வேண்டியுள்ளது.

3,016 சீசன் டிக்கெட்: இந்நிலையில், கோவை - மேட்டுப்பளையம் மெமு ரயில் தொடர்பாக கோவை மேட்டுப்பாளையம், கே.கே.நகரைச் சேர்ந்த அருண், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ), சேலம் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் இருந்து பெற்ற பதிலில், "கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான மெமு ரயில்களில் பயணிக்க, கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 3,016 சீசன் டிக்கெட் பெற்றுள்ளனர். இதுதவிர கடந்த ஏப்ரல் 3-ம் தேதி முதல் 7-ம் வரை கணக்கிட்டதில், சராசரியாக ஒரு நாளைக்கு 1,455 பேர் ரயில் நிலையங்களில் இருந்து டிக்கெட் பெற்று பயணிக்கின்றனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, "தேவை அதிகம் உள்ள கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயிலில் 8 பெட்டிகளே இணைக்கப்பட்டுள்ளதால், காலையும், மாலையும் நிற்ககூட இடம் இருப்பதில்லை. மற்ற நேரங்களில்கூட சற்று பரவாயில்லை. எனவே, பெட்டிகளின் எண்ணிக்கையை 12-ஆக அதிகரிக்க ரயில்வே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE