சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்

By செய்திப்பிரிவு

காரைக்குடி: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகாவில் பாஜக ஊழல் ஆட்சியை மக்கள் விரட்டியுள்ளனர். காங்கிரசுக்கு கொடுத்த மகத்தான வெற்றி எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் நலத் திட்டங்கள் கொண்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்து வந்துள்ளது. அவை தேர்தல் சமயத்தில் அறிவித்ததால் மக்களை சென்றடையவில்லை.

ஆனால் கர்நாடகாவில் 6 மாதங்களுக்கு முன்பே வாக்குறுதிகளை வெளியிட்டதால் நல்ல பலன் கிடைத்தது. இதே உத்தியை மக்களவைத் தேர்தலிலும் பயன்படுத்த வேண்டும். கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா போன்ற மாநிலத் தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் அவர்களை போன்ற தலைவர்கள் தமிழக காங்கிரசில் இல்லை. அதுபோன்ற தலைமையை உருவாக்கினால் நிச்சயமாக பலன் இருக்கும்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தல் அமையும் என கூற முடியாது. ஆனால் கர்நாடகா வெற்றி எங்களுக்கு பலத்தை கொடுக்கும். காவிரி பிரச்சினை இரண்டு மாநிலங்களுக்கும் இடையேயானது. அதை ராஜாங்க ரீதியான பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும். உள்கட்சிக்குள் பேசி தீர்க்க முடியாது. காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தாலும் அந்தந்த மாநில நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறது. மேகேதாது அணை விவகாரத்திலும் அதே நிலை தான். இதனால் கர்நாடக காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு என்று சொல்ல முடியாது. கர்நாடக தேர்தல் பணிக்காக 15 நாட்களுக்கு முன்பு தான், தமிழகத்தில் இருந்து சென்றோம். நாங்கள் பார்வையாளர்களாகத் தான் இருந்தோம். அந்த வெற்றியில் எங்களுக்கு ஒரு துளி கூட பங்கு கிடையாது" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE