கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் - அமைச்சர் பொன்முடி உறுதி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 27 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்ட சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேரின் உடல்களுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோரும் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''எக்கியார்குப்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதோடு இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தாலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். என்னதான் முதல்வர் நிதியுதவி அளித்தாலும், இது உண்மையில் பரிதாபத்துக்குரிய செய்திதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. கள்ளச்சாராயம், குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தடை செய்ய வேண்டும், இதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக காவல்துறையினரின் மாநாட்டை நடத்தி போதைப்பொருள் தடுப்பு அமலாக்க பிரிவு ஒன்றையும் முதல்வர் உருவாக்கிக் கொடுத்தார்.

அதனடிப்படையில் எவ்வளவோ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை பகுதியில் 2,200 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர் என்பது உண்மை. இருந்தாலும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்கட்சித் தலைவர் இதெல்லாம் புதிதாக நடைபெறுவது போல தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கபட்டன; அதற்கு துணைபோன அமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தியது. இது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். போதைப் பொருள் விற்பனையை கடந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்துவிட்டு சென்றனர்.

ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளார். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. இச்சம்பவத்தில் காவல்துறையினர் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது மற்ற கவால்துறையினருக்கு பாடமாக அமையும். அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். வரும் காலங்களில் கள்ளச்சாரம், போதைப் பொருட்கள் விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும்.'' இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE