முதல்வரின் முதன்மை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த கே.நந்தகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

தமிழக அமைச்சரவை அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், நிதித் துறை அமைச்சராக இருந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டன.

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 14 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்த த.உதயச்சந்திரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, நிதித் துறைச் செயலராகவும், ஊரக வளர்ச்சித் துறை செயலராக இருந்த பி.அமுதா உள்துறைச் செயலராகவும் நியமிக்கபட்டுள்ளனர். உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராகவும், அந்தப் பதவியில் இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரத் துறைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வி இயக்குநர்?

பள்ளிக்கல்வித் துறையில், முன்பு அதே துறையைச் சேர்ந்தவர்கள்தான் இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டு வந்தனர். அண்மையில்தான் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியில், ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கும் முறை கொண்டுவரப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையராக கே.நந்தகுமார் நியமிக்கப்பட்டார்.

பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியில் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கும் முறையை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்தவர்களை இயக்குநராக நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள், தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். எனினும், அவருக்குப் பதிலாக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்கல்வி இயக்குநராக, அந்த துறையைச் சேர்ந்தவர்களையே நியமிக்கும் பழைய முறை மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE