உயர் கல்வித் துறை அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று ‘டெட் ' ஆசிரியர் தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்ற உயர் கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ‘டெட்’ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நேற்று வாபஸ் பெற்றனர்.

‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும், ‘டெட்’ தேர்ச்சி அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ‘டெட்’ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே, நேற்று காலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி, துணை தலைவர் மு.வடிவேலன், மாநில செயலாளர் ம.க.கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ‘டெட்’ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இன்னொரு போட்டித் தேர்வு நடத்தக்கூடாது. ‘டெட்’ தேர்ச்சி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இல்லாததால் அவரது சார்பில் என்னை அந்த ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் எனக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதையேற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் நான் பேசினேன். ‘டெட்’ மதிப்பெண், ‘டெட்’ சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அதேபோல், ஆசிரியர் பணிக்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இருந்த வயது வரம்பான 57 என்பதை கடந்த அதிமுக ஆட்சியில் 47 என குறைத்துவிட்டனர். அந்த வயது வரம்பையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக நான் அறிகிறேன். எனவே சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த ஒருவாரம் அல்லது 10 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும். உங்கள் நலனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் முதல்வர் செய்வார் என்ற உறுதியையும் அளித்துள்ளேன். இந்த உறுதியை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுவார்கள் என நினைக்கிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும், மாலை டிபிஐ வளாகத்துக்கு நேரில் சென்ற அவர், ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர் நியமன முறை தொடர்பாக 10 நாளில் முடிவு அறிவிக்கப்படும். எனவே, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, தங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் 5 நாள் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.

அண்ணாமலை கோரிக்கை: இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அமைச்சர் பொன்முடி, நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ள செய்தி மகிழ்ச்­­­சி அளிக்கிறது. ஒரு வாரத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென்று, அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்