3 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் வரும்  ஆளுநர்: பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸார்

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் சுற்றுப் பயணமாக நாளை மாலை கொடைக்கானல் வருகிறார். இதையொட்டி, 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மே 14 முதல் மே 16ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக கொடைக்கானல் வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் நாளை (மே 14) காலை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு வழியாக மாலை 4.30 மணிக்கு கொடைக்கானல் செல்கிறார். பிற்பகல் 1.30 மணிக்கு அம்மையநாயக்கனூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரவு கொடைக்கானலில் உள்ள கோகினூர் மாளிகையில் தங்குகிறார். திங்கள்கிழமை (மே 15) காலை 11 மணிக்கு கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 3 மணிக்கு மேல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட உள்ளார். மே 16-ம் தேதி காலை கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

1,200 பேலீஸார் பாதுகாப்பு: ஆளுநர் வருகையையொட்டி வத்தலக்குண்டு முதல் கொடைக்கானல் செல்லும் வழித்தடங்களிலும், சுற்றுலா இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில், திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார், திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன், தேனி எஸ்பி டோங்ரே பிரவின் உமேஷ், 2 ஏஎஸ்பி.க்கள், 10 டிஎஸ்பி.க்கள் உட்பட 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் செல்லும் வழித்தடங்களில் 6 வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய் சோதனை குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்களிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா? என கண்காணித்து வருகின்றனர். கோகினூர் மாளிகை, அன்னை தெரசா பல்கலை மற்றும் சுற்றுலா இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

போக்குவரத்து மாற்றம்: ஆளுநர் வருகையை முன்னிட்டு நாளை (மே 14) முதல் மே 16 வரை கொடைக்கானலுக்கு செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிறு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், மே 16-ம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் வத்தலக்குண்டு - கொடைக்கானல் வழியாக எவ்வித வாகனங்களும் மேலே செல்வதற்கும், மேலே இருந்து கீழே இறங்குவதற்கும் அனுமதியில்லை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அனைத்து வாகனங்களும் பழநி - பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE