திருத்தங்கலில்  முற்கால பாண்டியர் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாரயண பெருமாள் கோயில் மேல மாட வீதியில் முற்கால பாண்டியர் காலத்து நடுகல் சிற்பம் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் மேல மாட வீதியில் பாறையில் வெட்டப்பட்ட புடைப்பு சிற்பத்துடன் கூடிய முற்கால பாண்டியர் காலத்து நடுகல் சிற்பம் மற்றும் தலைகீழாக உள்ள வட்டெழுத்து கல்வெட்டு ஆகியவை 1922-ம் ஆண்டில் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டது. அதை மீண்டும் 2005-ம் ஆண்டு தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது.

ஆனால் தற்போது சிற்பம் மண்ணில் புதைந்து மறைந்த நிலையில் உள்ளதாக திருங்கல் பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஆர்.பாலசந்திரன் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சிற்பம் உள்ள இடத்தை கண்டறிய மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆணையர் என்.சங்கரன், மாநகராட்சி அலுவலர்களுடன் நேரடியாக சென்று மேல மாட வீதி பகுதியில் நடுகல் சிற்பம் உள்ள இடத்தை தேடினார்.

பல இடங்களில் தேடிய பிறகு, பெருமாள் கோயில் மண்டபம் அருகே மண்ணில் புதைந்து இருந்த நடுகல் சிற்பம் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டு ஆகியவற்றை கண்டறிந்து மீட்டனர். அந்த கல்வெட்டில் போரில் வீரமரணம் அடைந்த வீரருக்கு ரத்தக்காணியாக நிலம் வழங்கிய தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும் அப்பகுதியில் வேறு ஏதும் தொல்லியல் சான்றுகள் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கண்டெடுப்பு பணியில் சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன், வட்டாட்சியர் லோகநாதன், வி.ஏ.ஓ பாண்டி மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE