“பாசிஸ்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது” - கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

“பாசிஸ்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி நிலவரப்படி 114 தொகுதிகளில் வெற்றிபெற்று காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் காங்கிரஸார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE