டேட்டா என்ட்ரி பணியாளர்கள் நிறுத்தம் : சென்னை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ் பதிவேற்றும் பணி தேக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 'டேட்டா என்ட்ரி' பணியாளர்கள் நிறுத்தப்பட்டதால், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான சான்றிதழ்கள் தேக்கமடைந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், தினசரி தலா நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகள் நடந்து வருகின்றன. இவற்றை மாநகராட்சி சுகதார பணியாளர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ, நூற்றுக்கும் மேற்பட்ட ‘டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்’ நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும் 9,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், மே 1ம் தேதி முதல் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் செய்ய முடியாமல், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: "சென்னை மாநகராட்சியில் தினசரி நுாற்றுக்கணக்கான பிறப்பு, இறப்புகள் நடக்கின்றன. இவை, உரிய வகையில் ஆராய்ந்து மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எங்களுக்கு உதவுவதற்காக ஒப்பந்த பணியாளர்கள் இருந்தனர்.

அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால், எங்களால் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை. இப்பணிகளுடன் சுகாதார பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டியுள்ளது. கூடுதல் பணி சுமையால், சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பதிவேற்றம் மற்றும் திருத்தம் செய்யாமல் தேக்கமடைந்துள்ளது. நிலைமை இப்படியே சென்றால், மேலும் சான்றிதழ்கள் தேக்கமடையும் சூழல் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE