மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு: ஆர்டிஐ தகவல்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமும் முக்கியமானது. இந்த விமான நிலையத்திற்கு தினமும் சுமார் 2500 பேர் வரை வந்து செல்கின்றனர்.

உள்நாட்டில் சென்னை, மும்பை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி போன்ற இடங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், மலேசியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இதனால் விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்க பணியின் நிலை என்ன?, எப்போது பணி நிறைவு பெறும்?, 24 மணி நேர சேவை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்வு ஆகியன எப்போது செய்யப்படும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை ஒருவர் ஆடிஐயில் கேட்டிருந்தார். அதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பதிலளித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிக்கு தேவையான 2 நீர்நிலை நிலப்பரப்பு இடங்களை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து, இன்னும் ஒப்படைக்கவில்லை. ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள பணிகள் மேற்கொள்ளப்படும். மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணி இன்னும் திட்டம் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது. விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரம் மதுரை விமான நிலையம் செயல்படுவதற்காக புதிய விமானங்கள் இயக்க வேண்டும். இதற்காக விமான சேவை நிறுவனங்களுடன் அறிக்கை பெறப்பட்டுள்ளது. விமான நிலையத்தை தரம் உயர்த்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 2022 முதல் 2023 வரை மதுரை விமான நிலையத்தை 11,38,928 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு ஆணையம் பதிலளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE