தமிழக அரசியலில் தலையிடுவதை தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும்: புதுச்சேரி திமுக

By அ.முன்னடியான்

புதுச்சேரி: தமிழக அரசியலில் தலையிடுவதையும் திமுக மூத்த அமைச்சர் குறித்து விமர்சிப்பதையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி திமுக அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தின் பகுதி நேர ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா, புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசையால் அடிக்கடி தமிழக அரசியலில் மூக்கை நுழைக்கிறார். தமிழகத்தைப் பற்றி நான் பேசுவதை யாரும் தடுக்க முடியாது என்று சவால் விடுகிறார்.

தமிழகத்தில் இருந்து நாகாலாந்து ஆளுநராக இருக்கும் இல.கணேசன் மற்றும் ஜார்கண்ட் ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்படியா அடிக்கடி பேசுகிறார்கள். அவர்களுக்கு இல்லாத தமிழக பாசமா தமிழிசைக்கு உண்டு. தேர்தலில் ஒரு முறை கூட வெற்றி பெற இயலாத தமிழிசை, திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனுக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது.

தமிழக ஆளுநருக்கு அறிவுரைச் சொல்ல அவருக்கு தகுதியில்லை என்று இவர் வக்காலத்து வாங்குகிறார். தமிழக ஆளுநர் அரசியல் சட்டப்படி முறையாக செயல்பட்டால் அவருக்கு ஏன் அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கப்போகிறார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும், ஆளுநருக்கு தனியாக அதிகாரமில்லை என்றும் உச்சநீதிமன்றமே பலமுறை குட்டு வைத்தும், தமிழக மற்றும் புதுச்சேரி ஆளுநர்களுக்கு உரைக்கவில்லை என்றால் என்ன செய்வது.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபொழுது ஆளுநரை ஏன் சந்திக்க வேண்டும் என்கிறார். ஆளுநர் பதவி கூடாது என்பது அண்ணா காலத்தில் இருந்து இன்று வரை திமுகவின் கொள்கையாகும். அதனால் தான் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பதவியே கூடாது என்று தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அரசியல் சட்டம் அதனை அங்கீகரிக்கும் வரை அதற்கான மரியாதையை கொடுப்பது அவசியம். அந்த ஜனநாயக புரிதலோடுதான் அவரை சந்திப்பதும், விவாதிப்பதும். ஆளுநர் பதவி வகிப்பவர் அந்த பதவிக்கான மாண்பை காக்க தவறும்பொழுது ஆளுநர் விமர்சிக்கப் படுகிறார். இதை ஆளுநர் தமிழிசை புரிந்துகொள்ள வேண்டும். தமிழிசை, தமிழக பாஜக தலைவராக இருந்த பொழுது எப்படியும் தாமரையை மலர வைப்பேன் என்று மூச்சுக்கு முப்பது முறை கூறி முடியாமல் போனதை இப்பொழுது நிறைவேற்றலாமா என்று மனக்கணக்குப் போட்டு தமிழக அரசியலில் மூக்கை நுழைக்கிறார். இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்பதை தமிழிசை உணர வேண்டும். ஜனநாயக ஆட்சி முறையில் உண்மையான நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில்தான் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் தான் அது ஜனநாயகம். இதைத்தான் திமுக தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புதுச்சேரி அரசு மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அறிவிப்பு செய்துள்ள பல திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு நிர்வாகியாக அதை செயல்படுத்துங்கள். "பெஸ்ட்" புதுச்சேரி என்றீர்களே. அதை உருவாக்க உழையுங்கள். மத்திய அரசில் மாநிலத்துக்கு பெற வேண்டிய நிதியை பெற்று வாருங்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு மூன்றாவதாக இன்னொரு மாநிலத்தை ஆள ஆசைப்படுவதையும், எங்கள், கட்சி மூத்த அமைச்சர் பற்றி விமர்சனம் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்