எடப்பாடி பழனிச்சாமியின் 69வது பிறந்தநாள் - கும்பகோணம் அருகே அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை ஒட்டி கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் 69-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை யொட்டி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராமா ராமநாதன் தலைமையில், ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று, கோயில் முன்புள்ள ஆக்ஞன கணபதிக்கு 108 தேங்காய் உடைத்தும், அங்குள்ள புகழ்பெற்ற ராஜ துர்க்கைக்கு வெற்றிலை, சம்பங்கி, சிகப்பு, வெள்ளை தாமரை இதழ்கள், எலுமிச்சை பழம், வளையல் உள்ளிட்டவைகளை கொண்டு தனித் தனியாத மாலைகளாக அணிவித்து, பழனிசாமி அவர்கள், நீடுழி வாழ வேண்டும் என முழக்கமிட்டு, அனைத்து காரியங்களிலும் அவர் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்தனை செய்தனர். இதில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்று ராஜ துர்க்கை அம்மனை வழிபட்டனர்.

பின்னர் பேசிய முன்னாள் எம்எல்ஏ ராமா ராமநாதன், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, இந்தக் கோயிலில், அவரது பெயரில் சிறப்பு வழிபாடு அர்ச்சனைகள் நடைபெற்றது. தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள பழனிச்சாமி பெயரில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE