தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடிப்பதில் திமுக ஆர்வமுடன் இருக்கிறது: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசியக் கல்விக் கொள்கை பின்பற்றப்படுமா என்பது குறித்தும், இது எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்ததற்குப் பின்பு ஒரு நிலைப்பாடு என அனைத்திலும் இரட்டை வேடத்தை கடைபிடித்து வரும் தி.மு.க. அரசு, கல்விக் கொள்கையிலும் இரட்டை வேடம் போடுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் இந்தச் செயல்பாட்டினை நினைக்கும்போது, "அதிகாரம் கள்ளினும், காமத்தினும் போதை மிக்கது" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிதான் மக்களின் நினைவிற்கு வருகிறது.

மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியபோது தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் மு.க. ஸ்டாலின். மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தது தி.மு.க. சமூக நீதிக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வரும் வகையில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்தியவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தேசியக் கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியவர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி மற்றும் மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால் அதனை தி.மு.க. முற்றிலும் நிராகரிக்கிறது என்றும், தமிழகத்திற்கெனத் தனியே மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும், இதற்கென கல்வியாளர்களை உள்ளடக்கிய உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டு, உரிய பரிந்துரைகள் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

இவையெல்லாம் அந்தக் காலம். அதாவது, தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலம், தி.மு.க. தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம். தி.மு.க. ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, புதியக் கல்விக் கொள்கையில் அதன் நிலைப்பாடு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிட்டது. 2021 அக்டோபர் மாதத்தில், மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர். 2021 டிசம்பர் மாதத்தில், தேசியக் கல்விக் கொள்கையில் இருக்கின்ற நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் கண்டிப்பாக செய்வோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறினார். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இது தவிர, "இந்தியை தமிழகத்தில் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மூன்றாம் மொழியாக எதையும் படிக்கலாம்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தேசியக் கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு எதிர்த்தாலும், மறைமுகமாக "இல்லம் தேடி கல்வி", "நான் முதல்வர்" போன்ற திட்டங்கள் மூலம் தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தெரிவித்து இருந்தார்.

இவையெல்லாம் இந்தக் காலம். அதாவது, மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கின்ற காலம். தி.மு.க.வின் இரட்டை வேடத்தை நிரூபிக்கும் வண்ணம் மாநிலக் கல்விக் கொள்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மாநில அரசின் தேசியக் கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமாகவே உருவாகிறது என்று தி.மு.க.-வால் நியமனம் செய்யப்பட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில், அரசாணைப்படி இலக்குகளை அடைய பணிகளை மேற்கொண்டபோது, வலுக்கட்டாயமாக சில நிபந்தனைகள் தன்மீது திணிக்கப்படுவதாகவும், தனக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் முதல்வரின் செயலாளர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். மேலும், ஜனநாயகமற்ற முறையில் செயல்படும் தலைமை, சில மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்கள், முறையற்ற தலையீடுகள் ஆகியவற்றால் உயர் மட்டக் குழு இயங்க முடியாமல் தடுமாறுகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதல்வரிடம் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்றும், எனவே, இனியும் குழுவில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும், கனத்த இதயத்துடன் உயர்மட்டக் குழுவிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். மாநிலக் கல்விக் கொள்கைக்காக ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்துவிட்டு, அதனை மிரட்டுவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் தேசியக் கல்விக் கொள்கையில் தி.மு.க.விற்கு உடன்பாடு இருக்கிறது என்பதும், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமே என்பதற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல் நாடகமாடியது என்பதும் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தான் தி.மு.க.வின் உண்மையான சுயரூபம். தி.மு.க. விற்கு என்று தனிக் கொள்கை ஒன்றும் கிடையாது. உண்மையிலேயே தி.மு.க.விற்கு மாநிலக் கல்விக் கொள்கையின் மீது அக்கறை இருந்திருந்தால், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடனேயே குழுவை அமைத்து, மூன்று மாதங்களில் அதன் அறிக்கையினைப் பெற்று 2022-23ம் ஆண்டு கல்வி ஆண்டிலிருந்தே அதனை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

மாறாக, குழு அமைப்பதில் தாமதம், அதன் பரிந்துரையை பெறுவதில் தாமதம், தேசியக் கல்விக் கொள்கைக்கு ஏற்ப பரிந்துரையை அளிக்குமாறு நிர்ப்பந்தம் என பல்வேறு குளறுபடிகளை தி.மு.க. அரசு அரங்கேற்றியுள்ளது. இதிலிருந்து, தேசியக் கல்விக் கொள்கையை கடைபிடிப்பதில் தி.மு.க. ஆர்வமுடன் இருக்கிறது என்பதும், மாநிலக் கல்விக் கொள்கை என்பது ஒரு நாடகம் என்பதும் தெளிவாகிறது. இது குறித்து உயர்மட்டக் குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தாலும், அது உண்மை நிலையை எடுத்துரைப்பதாக அமையவில்லை. மாறாக, பூசி மெழுகுவது போல் அமைந்துள்ளது. தி.மு.க.வின் நாடகத்தின் மூலம் அரசின் பணம் விரயமாகிறது.

தி.மு.க.வின் நிலைப்பாடு "மதில் மேல் பூனை" என்ற பழமொழிக் கேற்ப அமைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மாநில கல்விக் கொள்கைக்கான உயர்மட்டக் குழுவில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படுமா அல்லது தேசியக் கல்விக் கொள்கை பின்பற்றப்படுமா என்பது குறித்தும், இது எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் முதல்வர் தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்