அமைச்சர்களின் துறைகள் மாறினாலும் தொழில்துறையினருக்கு ஆதரவு தொடரும் - முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் துறைகள் மாறினாலும், தமிழக அரசு, தொழில் துறையினருக்கு அளித்துவரக்கூடிய ஆதரவு என்றும் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் (இந்தியா) தலைமைச் செயல் அலுவலர் உன்சூ கிம் பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகம் முதலிடம்: தமிழகத்துக்கும், ஹூண்டாய் நிறுவனத்துக்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி காரணமாக இந்த நிறுவனத்தினுடைய மொத்த முதலீடு சுமார் ரூ.23,900 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆட்டோ மொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக மின்னூர்திகள் தயாரிப்பில் தற்போது தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது பாராட்டுக்குரியது. இதற்கு, தமிழகத்தில் உள்ள திறன் வாய்ந்த மனித வளம், உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தமிழக அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முக் கிய காரணங்களாக உள்ளன.

அந்த வகையில் மின்னூர்தி தயாரித்தலுக்கான நெடுங்கால முதலீட்டுத் திட்டத்துக்கு தமிழகத்தை ஹூண்டாய் நிறுவனம் தேர்வு செய்துள்ளது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். அதற்காக தமிழக அரசின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இருங்காட்டுக்கோட்டையில் தற்போதுள்ள தொழிற்சாலையை, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக ஹூண்டாய் மேம்படுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இது ஒருபுறமிருக்க, பெரும் முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த தொழில்துறை முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகள். தற்போது தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவும், மிகவும் முனைப்புடன் செயல்பட்டு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் துறைகள் மாறினாலும், தமிழக அரசு, தொழில்துறையினருக்கு அளித்துவரக்கூடிய ஆதரவும், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும். இதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட ஹூண்டாய் நிறுவனம் தற்போது ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வந்திருப்பதே சாட்சி. கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, நான் அதிகளவிலான தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இதுவே தொழில்துறை முன்னேறியதற்கான உதாரணம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே ரூ.15,000 கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. முதல்வரின் ஆதரவு காரணமாகவே கடந்த இரண்டு ஆண்டுகளில் 225 தொழிற்சாலைகளுடனான ஒப்பந்தங்கள், ரூ.2 லட்சத்து 72,000 கோடி அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகளவில் முதலீடு செய்வதற்கு விருப்பமான மாநிலமாக தமிழகமே இருக்கிறது. இவ்வாறு தொழில் துறையை கட்டிகாத்து இந்த அளவுக்கு முதல்வர் கொண்டு வந்துள்ளார்’’ என்றார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள 35 சதவீத ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இங்குதான் இருக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் 6 சதவீத மின்சார வாகனங்கள் தமிழகத்திலேயே விற்பனையாகின்றன. தனித்துவமிக்க முதல்வரால் தொடர்ந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர் நிர்ணயித்த ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் வெகுவிரைவில் அடையும். கட்டமைப்பு ரீதியில் சிறந்துவிளங்குவதாக மட்டுமே தமிழகத்தை சுருக்கிவிட முடியாது.

மாணவர்களின் திறன் வளர்ச்சியிலும் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். வரும் நாட்களில் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவது மட்டும் பள்ளிகளில் இருக்கப்போவதில்லை. தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திறன் வாய்ந்தவர்களாக மாணவர்கள் உருவாக இருக்கின்றனர். அனைவரும் அதிக திறன் கொண்டவர்களாக இருப்பதால் யாரை தேர்ந்தெடுப்பது என தொழில்துறையினருக்கு குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகும். சிறந்த உட்கட்டமைப்பு, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், சிறந்த சுற்றுச்சூழல் போன்றவற்றால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடைந்து வருகிறது’’ என்றார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், ஹூண்டாய் கார்ப்பரேட் விவகாரங்கள் செயல் இயக்குநர் டி.எஸ்.கிம், நிதிப் பிரிவு துணைத் தலைவர் டி.சரவணன், கார்ப்பரேட் விவகாரங்கள் இணை துணை தலைவர் புனீத் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசு - ஹூண்டாய் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 1.78 லட்சம்பேட்டரி அசம்பிள் செய்யும் வகையில் தொழிற்சாலை, அடுத்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைத்தல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறனை 8.50 லட்சம் வாகனங்களாக உயர்த்துதல், மின்சார வாகனங்கள் தயாரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE