கோவை, சென்னையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

By செய்திப்பிரிவு

கோவை/சென்னை: கோவை, சென்னையில் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

கோவையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மார்ட்டின். லாட்டரி விற்பனைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை இவர் செய்து வருகிறார். தவிர, கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார்.

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது.

இதற்கருகே, அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.

சமீபத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது. சென்னையில் உள்ள அவரது மருமகன் வீட்டிலும் அப்போது வருமானவரித் துறையினரால் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், லாட்டரி அதிபர்மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கோவையில் 3 இடங்களிலும் இந்தசோதனை நடந்தது.

கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளக்கிணறு பிரிவு பகுதிக்கு வந்தனர். மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, கார்ப்பரேட் அலுவலகம், கல்லூரி ஆகிய வற்றுக்குச் சென்று சோதனை நடத்தினர்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை, மாலை வரை தொடர்ந்து நடந்தது. அதேபோல், சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மார்ட்டின் மருமகன் வீடு உள்பட மேலும் சில இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE