மாநில கல்விக் கொள்கை | உயர்நிலைக்குழு சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் செயல்படுகிறது - நீதிபதி த.முருகேசன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்கி வரும் உயர்நிலைக்குழு சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் செயல்படுகிறது என்றும் குழுவின் செயல்பாடுகளில் அரசு அதிகாரிகளின் தலையீடுகள் இல்லை என்றும் அக்குழுவின் தலைவர் நீதிபதி த.முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலத்துக்கென பிரத்யேக கல்விக்கொள்கையை உருவாக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் உயர்நிலைக் குழுவை கடந்த 1.6.2022 அன்று அமைத்தது. அக்குழு கல்விக்கொள்கையை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

ஜவகர் நேசன் குற்றச்சாட்டு: இந்நிலையில், அந்த குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஜவகர் நேசன், உயர்நிலைக்குழுவில் அரசு அதிகாரிகள் தலையீடு இருப்பதாகவும், மாநில கல்விக்கொள்கை தேசிய கல்விக்கொள்கையாக மாறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உயர்நிலைக்குழுவின் தலைவர் நீதிபதி த.முருகேசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில கல்விக்குழு செயல்பாடு தொடர்பாக பேராசிரியர் எல்.ஜவகர் நேசன் மின்னஞ்சல் வாயிலாக சில அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அனுப்பியுள்ளார். குற்றச்சாட்டுகளை மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அடிப்படை ஆதாரமற்றது: உயர்நிலைக்குழு ஜனநாயக முறையில் செயல்படவில்லை. குழுவின் தலைவர் ஜனநாயக முறையில் இல்லாமல் ரகசியாக செயல்படுகிறார் என்றும் அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை. அதேபோல், தேசிய கல்விக்கொள்கையின்படி மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றது; தவறானது.

பல்வேறு விஷயங்கள் தொடர்பாக குழுவின் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பேராசிரியர் ஜவகர் நேசனிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறுவது தவறானது. துணை குழுக்களை உருவாக்கி கருத்துகளை பெற்று பிப்ரவரி மாதத்துக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அனைத்து உறுப்பினர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.

சில உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், பேராசிரியர் ஜவகர் நேசன் மார்ச் வரை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. ஜுலை வரை காலஅவகாசம் வேண்டும் என்ற அவரது வேண்டுகோளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே மற்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை பரிசீலிக்க உயர்நிலைக்குழு முடிவுசெய்தது. இப்பணியை மே 4 முதல் ஜுன் 6 வரை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உறுப்பினர்களின் கருத்துகளை ஆய்வுசெய்யும் பணி மே 4-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கியபோது, இறுதிகட்ட ஆய்வை தள்ளிவைக்குமாறு பேராசிரியர் ஜவகர் நேசன் வேண்டுகோள் விடுத்தார்.

கமிட்டி தீர்மானம்: இறுதி ஆய்வு, அவரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வுசெய்த பின்னர்தான் எடுக்கப்படும்என்று அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் அவர் தனது முதல்நிலை கருத்துகள் அடங்கிய அறிக்கையை குழுவின் தலைவரிடம் வழங்கினார். அது 232 பக்கங்கள் கொண்டதாக இருந்ததால் அவரது கருத்துகளை மே 11-ம் தேதி அன்று பரிசீலிக்கலாம் என்று கமிட்டி தீர்மானித்தது.

அதேபோல், குழுவின் செயல்பாட்டில் அரசு அதிகாரிகள் தலையிடுகிறார்கள் என்ற அவரது குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமில்லாதது. உயர்நிலைக்குழு ஜனநாயக முறையில் தெளிவான சிந்தனையோடு தனது பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது.

தமிழக மக்களுக்கு உறுதி: தமிழகத்தின் சமூக பொருளாதார சூழலையும், நமது பாரம்பரியத்தையும், எதிர்கால சூழலுக்குஏற்ப கல்வியை மேம்படுத்துவதையும் மனத்தில்கொண்டு உயர்நிலைக்குழு உருவாக்கும் கல்விக்கொள்கை சுதந்திரமாகவும், கூட்டுமுயற்சியாகவும் ஒருங்கிணைந்ததாகவும் அமைந்திருக்கும் என்று தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் நீதிபதி த.முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE