கல்விக் கொள்கை விவகாரம் | பேராசிரியர் ஜவகர் நேசன் குற்றச்சாட்டுக்கு மாநில உயர்நிலைக் கல்விக்குழு மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவகர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் மாநில உயர்நிலைக் கல்வி குழுவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜவகர் நேசன் வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக அரசு கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழ்நாட்டிற்கென்று தனித்துவம் வாய்ந்த ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. தேசிய கல்விக் கொள்கையைப் புறக்கணித்து அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு மாற்றாக மாநில அளவில், மாநில மக்களின் விருப்பம், எதிர்பார்ப்புகள், இளைஞர்களின் வளர்ச்சியென அனைத்தையும் கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில், ஒரு தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென அரசு ஆணை பிறப்பித்தது.

இதுதொடர்பாக கடந்தாண்டு ஜூன் 15-ம் தேதி முதல் கூட்டம் நடத்தப்பட்டது. அதிலிருந்து எங்களுடைய பணிகள் தொடங்கியது. அன்று முதல் 11 மாதங்கள் குழுவின் திட்டங்களின் அடிப்படையில் பல வேலைகள் செய்யப்பட்டது. அதாவது தனித்துவமான கல்விக் கொள்கை என்றால், அந்த மாநிலத்தில் உள்ள நிலைகள், மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள், சவால்கள், கேள்விகள் என அனைத்தையும் உள்வாங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநில மக்களை கல்வியில் கரைத்தேற்றும் வகையில்தான் தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இந்த மிகப்பெரிய வாய்ப்பில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பின்படி என்னை முழுமையாக ஈடுபடுத்தி செயல்பட்டேன்.

கல்விக் கொள்கை என்பது மற்ற துறை சார்ந்த கொள்கைகள் போன்றது கிடையாது. இது பொது கொள்கை. மாநிலத்தின் அனைத்து அங்கத்தினரையும் உள்ளடக்கி, அவர்களை கருத்துகளை உள்வாங்கித்தான் கல்விக் கொள்கையை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை, நேரடியாகவோ மறைமுகவோ மாநில கல்விக் கொள்கை குழுவின் வாயிலாக திணிக்கப்பட்டுள்ளது. அந்த திணிப்புகள் பன்முகங்களில் நிகழ்ந்தது. கூட்டங்களின் வாயிலாகவும் நிகழ்ந்தது. இவையெல்லாம் கல்விக்கொள்கை குழவின் கூட்டத்திலேயே நடந்தது.

இந்திய அளவில், பல கல்விக்கொள்கைகள் தேசிய அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து தேசிய கல்விக் கொள்கைகளையும் பரிசீலனை செய்யாமல், தமிழ்நாட்டிற்கென்று கல்விக்கொள்கையை வகுக்க முடியாது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையை மட்டும் பிரதானப்படுத்தி அதன் அடிப்படையில் இந்த கல்விக்கொள்கை வரவேண்டும் என்று ஒருசில அதிகாரிகள், நான் தமிழக அரசை குறைகூற விரும்பவில்லை. அதிகாரமிக்க அதிகாரிகள் ஒரு திணிப்பைக் கொண்டுவரும்போது நான் அதை எதிர்த்தேன். இதுதொடர்பாக குழுத் தலைவருக்கு நான் பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை ஆதாரப்பூர்வமாக சமர்ப்பித்து இதுவரை ஒரு சிறு பதில்கூட வந்தது இல்லை.

எனது தரப்பு கோரிக்கைகளால், இது தமிழகத்துக்கான தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கையாக அமைந்துவிடும் என்ற பயத்தில், மேலிடத்தில் இருந்து அதிகாரிகளிடம் இருந்து எனக்கு அச்சுறுத்தல் வந்தது. இந்த கல்விக் கொள்கை குழு செய்ய வேண்டியதை தடுக்கும் வகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ல் உள்ள பெரும்பாலான அம்சங்களைக் கொண்டு வருவதில், முதலாளித்துவ கல்விக்கொள்கை அதிகமாக திணிக்கப்பட்டது. பன்முகங்களில் அதிகாரப்பூர்வமாக குழுவில் திணிக்கப்பட்டது. இதனால் எனக்கு எதிர்ப்புகள் கடுமையாக வந்தது. இந்த சீர்கேடுகளை சரிப்படுத்த முடியாது என்று உணர்ந்ததன் அடிப்படையில்தான், நான் குழுவில் இருந்து வெளியேறினேன்" என்று கூறியிருந்தார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு: முன்னதாக, ஜவகர் நேசன் நேற்று அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலளிக்கும் விதமாக குற்றச்சாட்டை மறுத்து தமிழக அரசின் மாநில உயர் நிலைக் கல்விக்குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜனநாயகமற்ற முறையில் இந்த குழு செயல்படுவதாக ஜவகர் நேசன் கூறியிருப்பது தவறானது. அதேநேரம், குழுவின் தலைவர் ரகசியமாக செயல்படுவதாக கூறியிருப்பதும் தவறானது.

அதேபோல், தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி மாநிலக் கல்வி உருவாக்கப்பட்டிருப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மாநிலத்தின் அனைத்து பங்குதார்களின் கருத்தைப் பெற்றே தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. ஜவகர் நேசனிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் தவறானது. துணைக் குழுக்கள் அமைத்து விவாதித்து அதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்க பிப்ரவரி 2023 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த காலம் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டது.

அதேபோல், அரசு அதிகாரிகளின் தலையீடு இருந்ததாக அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை. துணைக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகத்தான் ஜவகர் நேசன் நியமிக்கப்பட்டாரே தவிர, உயர்நிலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவரை இந்த குழுவோ, குழுவின் தலைவரோ நியமிக்கவில்லை.

மாநில கல்விக்கொள்கை குழு, சீரிய முறையில் தெளிவான வழியில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு என்று சுதந்திரமான தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், அனைத்து அங்கத்தினரின் கருத்துகளையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், சமூக பொருளாதார நிலைகள், வரலாற்று பெருமையை முன்னுதாரணமாக கொண்டு கல்விக்கொள்கை உருவாக்கப்படவுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்