சிஆர்பிஎஃப் ஆள் சேர்ப்பு | தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்துத் தேர்வை நடத்த வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எஃப் ( Central Reserve Police Force- CRPF) துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே எட்டாம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சி.ஆர்.பி.எஃப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE