சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத செயல்களில் திமுகவினர் ஈடுபடுவது அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சட்ட விரோதமாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டதிட்டங்களை அனைவரும் மதித்து நடந்தால் அங்கே காவல் துறைக்கோ, நீதிமன்றத்திற்கோ எவ்வித வேலையும் இல்லை. இது இல்லாத சூழ்நிலையில், பொது அமைதியைக் காக்க காவல் துறையின் நடவடிக்கை அவசியம் தேவைப்படுகிறது. சட்டதிட்டத்தை மதிப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும்; சட்டத்தையும், மற்றவர்களின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடிய எதிரியாகவும் காவல் துறை விளங்க வேண்டும். அதாவது, காவல் துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரி என்ற பக்கம்தான் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட காவல் துறையையே மிரட்டும் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்களும் தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. அண்மையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டிருந்த காவல் ஆய்வாளரை, கொளத்துப் பாளையம் நகர திமுக செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று இது குறித்து விசாரணை நடத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த ஆய்வாளர் மறுக்கவே, "தொப்பியை கழட்டி விடுவேன், ஜாக்கிரதை" என்று ஆய்வாளரை தி.மு.க. செயலாளர் மிரட்டியுள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதே திருப்பூர் மாவட்டம், அவிநாசி, நம்பியாம்பாளையத்தில் உள்ள காய் கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த தி.மு.க. நிர்வாகி அங்குள்ள கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிகப் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது. தமிழகத்தில் காவல் துறையினரையும், பொதுமக்களையும் மிரட்டும் அளவுக்கு தி.மு.க.வின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் "திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்" என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து தி.மு.க. கூட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. சாதனை என்ற பெயரில் மக்களுக்கு வேதனையை தி.மு.க.வினர் அளித்து வருகின்றனர். இது தவிர மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை என அனைத்திலும் தி.மு.க.வினரின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது. அண்மையில், போதை பொருள் கடத்தல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் நேற்று பத்திரிகையில் வெளியான செய்திகள். வெளியாகாத செய்திகள் பல உள்ளன. இதுபோன்ற செயல்கள்தான் தமிழகம் முழுவதும் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. தி.மு.க.வினரின் அராஜகத்தை, அத்துமீறல்களை கட்டுப்படுத்தி வைத்தாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் ஐம்பது விழுக்காடு குறைந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, பொதுமக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையிலும், சட்ட விரோதமாக செயல்படுபவர்கள் மீது, காவல் துறையையே மிரட்டுபவர்கள் மீது, கட்சி வித்தியாசமின்றி கடும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்