சாலை, பாலப் பணிகளைமுன்கூட்டியே முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகளை விரைந்து சரிசெய்ய வேண்டும். சாலை, பாலப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாக துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சியால், சாலைகளில் கார்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்குஅதிகரித்து வருகிறது. சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது சரியானதே.

இந்த சூழலில், துறைகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள், குறிப்பாக, சுற்றுச்சூழல், நிலஎடுப்பு பிரிவுகளில் போதிய எண்ணிக்கையில் மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமிப்பது, நிர்வாக ரீதியிலான தாமதங்களை தவிர்ப்பது போன்றவற்றில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரை பெற்றுத் தரும். சென்னையில் பல பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் தவிர்த்து, இதர காரணங்களுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளதை காண முடிகிறது. இது சாலையில் செல்வோருக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பதுடன், அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.

எனவே, தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் இதை கண்காணிக்க வேண்டும். சென்னைபுறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பணி முன்னேற்றத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், உடனடியாக தலைமைச் செயலர், துறை அமைச்சர் அல்லது எனதுகவனத்துக்கு கொண்டு வாருங்கள். அனைத்து முக்கிய பணிகளின் முன்னேற்றத்தையும் தகவல் பலகையில் தொடர்ந்து ‘அப்டேட்’ செய்ய வேண்டும். பணி முன்னேற்ற அறிக்கையை துறை செயலர்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட அனைத்து பணிகளுக்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது.

கடந்த 2021-22-ம் ஆண்டு பணிகள், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை தீவிரமாக கண்காணித்து, விரைவாக முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே பணிகளை முடியுங்கள். அடுத்த ஆய்வு கூட்டத்தின்போது, சாலைப் பணிகளில் சிறந்த அளவுக்கு முன்னேற்றம் காட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, துறை செயலர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE