கழிவுநீர் தொட்டி மரணங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம் - தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் தகவல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தூய்மைப் பணியின் போது கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பணியாளர்கள் உயிரிழப்பது தொடர்கிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது என்று தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு வந்திருந்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களிடம் குறைகளைக் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புதுவை அரசு துறைகளின் தூய்மைப்பணியாளர்கள், அவர்களது சங்கப்
பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:"புதுச்சேரியில் ஜிப்மர், புதுச்சேரி நகராட்சி உள்ளிட்டவற்றில் தூய்மைப் பணியாளர்களுக்கான குறைகள், திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜிப்மரில் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த பணிக்கான காலம் இந்த மாதம் முடிகிறது. 1030 பேர் பணியில் உள்ளனர்.

புதிதாக யார் ஒப்பந்ததாரர்கள் வந்தாலும் இவர்களையே பணிக்கு வைக்க இயக்குநரிடம் அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் பணியில் சேர்க்கையின் போது முன்வைப்புத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் கோருவதாக புகார் கூறப்பட்டது. அதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூய்மை பணியில் ஈடுபடும் போது தேவையான பாதுகாப்பு சாதனங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளோம். இந்தியாவில் 11 மாநிலங்களில் தூய்மைப் பணியாளர் ஆணையம் உள்ளது. புதுச்சேரியில் தேவை என்று முதல்வர் ரங்கசாமியிடம் தெரிவித்துள்ளோம்.

அதற்கான நிதிக்கழகம் அமைக்க கோரியுள்ளோம்.துப்புரவு பணியாளர் சாலையோரம் படுத்து தூங்குவதைத் தவிர்க்க திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்து தருவதாக புதுச்சேரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியமாக ரூ. 9 ஆயிரம் புதுச்சேரியில்தான் தரப்படுகிறது. தூய்மைப்பணியில் அவுட்சோர்ஸ் முறையை ஒழிக்க வேண்டும். இந்த முறையால் தொழிலாளர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக ஊதியம் வழங்குவதே நல்லது. தூய்மைப் பணியின் போது கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பணியாளர்கள் உயிரிழப்பது தொடர்கிறது.

உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் மகாராஷ்டிரம் இருக்கிறது. கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் தூய்மைப்பணியின் போது விஷவாயு தாக்கி சுமார் 400 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆண்டில் தமிழகத்தில் விஷவாயு தாக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE