சிவகங்கை அரசு மருத்துவமனையில் முடங்கிய ஏசி இயந்திரங்கள்: நோயாளிகள் சிரமம்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், அவசர சிகிச்சை உள்ளிட்ட வார்டுகளில் 15-க்கும் மேற்பட்ட குளிர்சாதனங்கள் பழுதடைந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட வார்டுகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட வார்டில் குளிர்சாதனங்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

இங்கு 60-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள 4 குளிர்சாதனங்களும் பழுதடைந்துள்ளன. மின்விசிறிகளும் பல இயங்கவில்லை. இதேபோல் அவசர சிகிச்சை, டயாலிசிஸ் பிரிவிலும் குளிர்சாதனங்கள் பழுதடைந்துள்ளன. மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முழுவதும் 15-க்கும் மேற்பட்ட குளிர்சாதனங்கள் பழுதடைந்துள்ளன.

தற்போது கோடைக்காலம் என்பதால் நோயாளிகள், மருத்துவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவ பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''நிதி ஒதுக்கீட்டை பொறுத்து குளிர்சாதனங்களை சீரமைத்து வருகிறோம். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட வார்டில் உள்ள குளிர்சாதனங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டவை. அவற்றை பழுதுநீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்விசிறி பழுதை புகார் வந்ததும் சரிசெய்துவிட்டோம்.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE