சென்னை: "தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும். இதனை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமல்ல, அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட வேண்டும். சென்னை புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டப் பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்திட வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், புதன்கிழமை (மே 10) தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் நகராட்சி நிருவாகத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்த பணி ஆய்வினை இன்றைக்கு நாம் மேற்கொண்டோம்.
பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால், சாலைகளில் கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. அதேபோல், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது நியாயமானதே.
» இந்து கடவுள்களை இழிவாக பேசிய வழக்கு: உதவி இயக்குநருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
» புதுச்சேரியில் கோயில்களுக்கு முன்பு மதுக்கடைகள் திறப்பு: இந்து முன்னணி கண்டனம்
பல்வேறு துறைகள் அரசளவில் இருந்தாலும், இந்த ஒரு பொருளுக்கென்று சாலைகள் மற்றும் பாலங்களின் பணி முன்னேற்றத்தை மட்டும் நான் தனிப் பொருளாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.2021-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டுகளில், ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் நகராட்சி நிருவாகத் துறை ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து புள்ளிவிவரங்களோடு இன்றைக்கு நாம் ஆய்வு செய்திருக்கிறோம்.
துறைகளுக்குள் இருக்கிற பிரச்சினைகள், குறிப்பாக, சுற்றுச்சூழல், நிலஎடுப்புப் பிரிவுகளில் போதுமான எண்ணிக்கையில் மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தல், நிருவாக ரீதியிலான தாமதங்களைத் தவிர்த்தல் போன்றவற்றில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும். தற்போது நான் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் தவிர்த்து, பல்வேறு இதர காரணங்களுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளதைக் காண்கிறேன். இது சாலை உபயோகிப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்து வருவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும்; இதனை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமல்ல; அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட வேண்டும். சென்னை புறநகர்ப் பகுதிகளில் செயல்படுத்தப்படக்கூடிய திட்டப் பணிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்திட வேண்டும்.பணி முன்னேற்றத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால், அது உடனடியாக தலைமைச் செயலாளர் அல்லது துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்க்கப்பட வேண்டும். அனைத்து முக்கிய பணிகளின் முன்னேற்றத்தையும் டேஷ்-போர்டில் அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், பணி முன்னேற்ற அறிக்கையினையும் எனக்கு அனுப்பி வைக்க தொடர்புடைய துறைச் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் இன்று ஆய்வு செய்த பணிகளுக்கெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 2021-2022 ஆம் ஆண்டுப் பணிகள், கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஆகிய அனைத்தையும் தீவிரமாகக் கண்காணித்து, மிக விரைந்து பணிகளை முடித்திட வேண்டும்.
எனவே, இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே பணிகளை முடியுங்கள். பிரச்சினைகள் இருந்தால், மீண்டும் சொல்கிறேன், அமைச்சர்களின் கவனத்திற்கும், என்னுடைய கவனத்திற்கும் கொண்டு வாருங்கள்.மக்களின் மிக முக்கியத் தேவையான சாலைப் பணிகளை நிறைவேற்றுவதில், மூத்த அலுவலர்களாகிய நீங்கள் அடுத்த ஆய்வுக் கூட்டத்தின் போது, சிறந்த அளவிற்கு முன்னேற்றம் காட்டிட வேண்டும்" என்று முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago