நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் திமுக, காங்கிரஸ்: புதுவை அதிமுக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: நீட் தேர்வை வைத்து திமுகவும் காங்கிரஸும் அரசியல் செய்வதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மத்தியில் திமுக - காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்து விட்டு தற்போது நாடு முழுவதும் தங்கு தடை இன்றி நீட் தேர்வு நடந்து வரும் நிலையில் மாணவர்களிடையே வீணான குழப்பத்தை திமுகவும் காங்கிரசும் செய்து வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தொடர்பாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசின் நிலைபாடு என்ன என நாராயணசாமி கேட்கிறார். மாணவன் தற்கொலைக்கு எந்த அரசோ, முதல்வரோ காரணம் இல்லை. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி. நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை என்பது சரியான முடிவு அல்ல. நீட் தேர்வை வைத்து திமுகவும் காங்கிரசும் அரசியல் செய்கின்றனர்.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற எந்த திட்டமாக இருந்தாலும் அது தொடர்பான அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்த துறை ரீதியான அனுமதி வாங்க வேண்டும். இது முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு புரியாது. ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி எந்த திட்டத்தையும் செயல்படுத்த இல்லை.

நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த திட்டங்கள் குடியரசு தலைவரை வைத்து துவக்கப்படும் என முதல்வர் அறிவித்த பிறகும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி திட்டங்களையும் ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கிறார். அதனால், நாராயணசாமி ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்து தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா புதுச்சேரி மாநிலம் முழுவதும் 12 பார்களுக்கு சொந்தக்காரர் ஆவார். ஆனால் அவர் அதிகமான பார் திறக்கப்படுவதாகவும், அனுமதி கொடுக்கக் கூடாது என முதல்வரிடம் கூறி வருகிறார். மதுபான கொள்கையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக்க வேண்டும்.

எந்தெந்த தொகுதியில் கஞ்சா விற்கப்படுகிறதோ அவ்வாறு விற்கப்படும் போது குற்றவாளிகள் பிடிபட்டால் அதற்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அப்பொழுதுதான் கஞ்சா விற்பனை தடுக்கப்படும். எம்.எல்.ஏக்கள் கஞ்சா விற்பனையை தடுக்க ஒருங்கிணைந்து போராட வேண்டும். அவ்வாறு கஞ்சா விற்பனையின் போது கைது செய்யப்படும் குற்றவாளிகளை விடுவிக்க கோரி சிபாரிசு செய்யக்கூடாது" என அன்பழகன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE