பழநி | ஆப்பிளைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படும் கொடுக்காப்புளி - ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் ஆப்பிளை விட விலை அதிகரித்து கொடுக்காப்புளி கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட கிராமப் புறங்களில் பரவலாக கொடுக்காப் புளி சாகுபடியாகிறது. இனிப்பு, துவர்ப்பு சுவையுடைய இவை சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. தற்போது சீசன் என்பதால் உள்ளூர் மற்றும் திருச்சி, கரூரில் இருந்து அதிகம் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், மற்ற பழப்பயிர்களை விட விளைச்சல் குறைவு என்பதால் விலை பல மடங்கு அதிகரித்து, ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையாகிறது. அதே சமயம், ஒரு கிலோ ஆப்பிள் ரூ.180-க்கு விற்பனையாகிறது. ஆப்பிளை விட கொடுக்காப்புளி விலை ரூ.20 கூடுதலாக விற்பனையாவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பழ வியபாரி கோபி கூறுகையில், "மே மாதம் கொடுக்காப் புளியின் சீசன் என்பதால் ஒரு மாதம் வரை வரத்து இருக்கும். ஆனால், விளைச்சல் குறைவு என்பதால் விலை அதிகம். இருப்பினும் பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE