நீர்நிலைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு - ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: நீர்நிலைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பார்வதி அகரத்தை சேர்ந்த மல்லிகா (45), ஹேமலதா (16), கோமதி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று காலை திருத்தணியில் உள்ள பழைய கைவிடப்பட்ட கல்குவாரி குட்டை நீரில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் கீழ்த்திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் வீட்டுக்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் (25), அருண்குமார் (23) ஆகியோர் நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

தற்போது கோடைகாலம் என்பதால், பொதுமக்கள் குறிப்பாக, சிறுவர், சிறுமியர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளங்கள், ஏரிகள், அருவி மற்றும் ஆறுகள் போன்றநீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர். அவ்வாறு குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளிப்பதுடன் பல குடும்பங்களை தீரா துயரிலும் ஆழ்த்தி விடுகின்றன.

இதைத் தவிர்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை போதுமான பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதில் போதிய கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE