அமைச்சரவையை மாற்றும் உரிமை முதல்வருக்கு உண்டு - அமைச்சர் துரைமுருகன் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சரவையை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப் போவதாகவும் இதுதொடர்பாக ஆளுநரை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க இருப்பதாகவும் நேற்று காலை தகவல் வெளியானது. ஆனால் ஆளுநரை துரைமுருகன் சந்திக்கவில்லை. இதற்கிடையே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்று இரவு ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. அதில் அமைச்சரவையில் டிஆர்பி ராஜா சேர்க்கப்படுவதாகவும், தற்போதைய அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் இருந்துவீட்டுக்கு சென்ற அமைச்சர் துரைமுருகனை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் உண்டா?

தன் கீழ் பணியாற்றுபவர்களை அவர் மாற்றலாம். எடுக்கலாம். புதியவர்களை போடலாம். இதற்கு முதல்வருக்கு உரிமை உள்ளது. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இப்படி நடைபெறுமா என்பது உங்களுக்கு தெரிந்த அளவில்தான் எனக்கும் தெரியும்.

இலாகா மாற்றத்தில் உங்கள் பெயரும் இருப்பதாகவும் நிதி அமைச்சராகலாம் என்றும் கூறப்படுகிறதே?

இருக்கட்டும்; வேண்டாம் என்றா கூறப்போகிறேன்.

நீங்கள் துணை முதல்வராகப் போவதாகவும், மூன்று துணை முதல்வர்களை நியமிக்கப்போவதாகவும் தகவல்கள் வருகிறதே?

வரட்டும் நல்லதுதான். இதுபோன்ற விஷயங்களை யார் உருவாக்குகிறார்கள். இந்த கேள்விகளை நீங்கள் சித்தரஞ்சன் சாலையில் (முதல்வர் வீடு அமைந்துள்ள பகுதி) சென்று கேட்க வேண்டும்.

வழக்கமான அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க வேண்டும். அதற்கான திட்டம் உள்ளதா?

அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா என்பதே எனக்கு தெரியாது. அப்புறம்தான் பார்க்க வேண்டும். நான் காலை முதல்வர் வீட்டுக்குத்தான் சென்றேன். அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு கோட்டையில் இருந்து பிற்பகல் புறப்படும்போது பேசினேன். வீட்டில் ஓய்வில் இருப்பதாக கூறினார்.

11-ம் தேதி பதவியேற்பு விழா இருப்பதாக கூறப்படுகிறதே?

இருந்தால் போவோம்.

திராவிட மாடல் காலாவதியாகிவிட்டதாக, ஆளுநர் பேட்டி அளித்துள்ளாரே?

அவர் பேச்சு காலாவதியாகிவிட்டது.

முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் நீ்ங்களும் பங்கேற்கிறார்களா?

நான் செல்லவில்லை.

அமைச்சரவை மாற்றத்துக்கான அவசியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அதை முடிவு செய்ய வேண்டியது முதல்வர்தான்.

தமிழக அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

உங்கள் யூகங்கள் சரியாக இருந்தால் நாம் பார்ப்போம். இது உலக ரகசியம் இல்லை. நான் 2 நாட்களாக இங்கு இல்லை.

அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறதே?

எனக்கு ஒன்றும் கலக்கம் இல்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE