அரசு அலுவலகங்களில் தினமும் திருக்குறள், கலைச்சொற்கள் எழுதி வைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினமும் திருக்குறள் மற்றும் ஆங்கில பொருளுடன் கூடிய தமிழ் கலைச் சொற்களை பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவைச் சுட்டிக்காட்டி அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அனைத்து துறைஅலுவலகங்களுக்கும் அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், ‘அரசின் தலைமைச் செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய தமிழ்ச் சொல்லையும், ஒரு திருக்குறளை பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந் தது.

ஆனால், ஒரு சில அலுவலகங்களைத் தவிர மாநிலத்தில் உள்ளபெரும்பான்மையான அலுவலகங்களின் தகவல் பலகையில் திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொல்லை காட்சிப்படுத்தும் நிகழ்வுகாணப்படவில்லை. எனவே, அரசாணையில் அறிவுறுத்தியுள்ளபடி, உரிய நடவடிக்கை எடுத்து, திருக்குறளின் முப்பாலில் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களில் அதன் பொருளுடனும், தமிழ் ஆட்சிச்சொல் அகராதியில் உள்ளசொற்களில் ஓர் ஆங்கிலச்சொல்லை அதற்குரிய தமிழ்ச்சொல்லுடனும் குறிப்பிட்ட அளவில், கரும்பலகை அல்லது வெள்ளைப்பலகையில் எழுதி வைக்க வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணித்து அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வரவேற்பு: அரசு அலுவலகங்களில் நாள்தோறும் ஒரு திருக்குறள், தமிழ்ச்சொல் திட்டம் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு திருக்குறள் அதற்கானபொருளுடன் எழுதி வைக்க வேண்டும். ஆட்சி சொல்லகராதியில் உள்ள ஓர் ஆங்கிலச் சொல் மற்றும் அதற்கு இணையான தமிழ்ச் சொல்லையும் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத் தக்கது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் என்றும் அரசாணை உள்ளது. அதன் மீது தொடர்நடவடிக்கைகளை தமிழக அரசுஉடனே மேற்கொள்ள வேண்டும்.பட்ட மேற்படிப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம், பட்டப்படிப்பு வரை தமிழ் கட்டாய பயிற்றுமொழி, நீதிமன்றங்களிலும், கோயில்களிலும் தமிழ், தமிழில் படித்தவர்களுக்கு உயர் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு என தமிழை அழிவிலிருந்து காப்பதற்காக தமிழக அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் ஏராளம். அனைத்தையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE