ராஜபாளையத்தில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீரால் பொதுமக்கள் சிரமம்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இன்று மாலை 5 மணிக்கு மேல் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

ராஜபாளையம் - சத்திரபட்டி சாலையில் ரயில்வே மேம்பால பணி கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் மலையடிபட்டி வழியாகவும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஐஎன்டியூசி நகர், கணபதியாபுரம் வழியாகவும் சென்று வருகின்றன. இந்நிலையில் ராஜபாளையம் நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

மாலை 5:20 மணிக்கு ஆரம்பித்து 6:45 மணி வரை கனமழை பெய்தது. இதில் ராஜபாளையம் நகரில் 24 மி.மீ மழை பதிவானது. இந்த மழை காரணமாக சங்கரன்கோவில் முக்கு, காந்தி கலை மன்றம், சத்திரபட்டி சாலை, பழைய பேருந்து நிலையம், பஞ்சு மார்க்கெட் என நகரின் பல்வேறு பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாலை நேரம் என்பதால் கல்லூரி மற்றும் வேலை முடிந்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

சத்திரபட்டி சாலைக்கு செல்லும் மாற்று பாதைகளான கணபதியாபுரம் ரயில்வே தரைப்பாலம், மலையடிபட்டி பகுதிகளில் சாலை தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடித்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE