மே 5 வரை சூடானில் இருந்து 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் வருகை: தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் சூடானில் இருந்து கடந்த மே 5-ம் தேதி வரை 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், சூடான் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவம் மற்றும் உள்நாட்டு படைப் பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசித்த தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவித்தனர்.அவர்களை மீட்க கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழ்நாடு அரசிற்கு தொடர் கோரிக்கைகள் வரப்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் ஆணைப்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் ஒருங்கிணைப்பில் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் சூடானில் உள்ள தமிழர்களுடன் அலைபேசி வாயிலாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டு. தனியாக Whatsapp குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நேர்வில் மீட்பு பணியை துரிதப்படுத்த தமிழக முதல்வர் பிரதமரிடம், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் "ஆப்ரேசன் காவிரி" என்ற திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக சூடானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி, மும்பை, பெங்களுரூ, கொச்சின் மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களுக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் ஒன்றிய அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு வரும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் புதுடெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் மற்றும் சென்னை, அயலகத் தமிழர் நலத்துறையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் புதுடெல்லி, மும்பை, கொச்சி, அகமதாபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் கடந்த 05.05.2023 வரை வந்தடைந்த 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் மாநில அரசின் சார்பாக விமானங்கள் மூலமாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மாநில அரசின் சார்பாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE