இந்திய வாகன ஆராய்ச்சி சங்க உரிமம் பெற்ற பள்ளி வாகனங்களை பதிவு செய்யக் கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்தின் உரிமம் பெற்ற நிறுவனங்கள் வடிவமைக்கும் பள்ளி வாகனங்களை மட்டும் பதிவு செய்யக் கோரிய மனுவை பரிசீலித்து ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் மோசமான பராமரிப்பு காரணமாக விபத்துக்களைச் சந்திக்கின்றன. இதனால், அப்பாவி மாணவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. பள்ளி வாகனங்களில், மாணவர்களின் பாதுகாப்புக்காக, தீ முன்னறிவிப்பு கருவி, அலாரம், வேக கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவற்றை பொருத்த வேண்டும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (Automotive Research Association of India) விதிகளை வகுத்துள்ளது.

இந்த சங்கத்தின் உரிமம் பெற்ற வாகன வடிவமைப்பு நிறுவனங்கள் மட்டுமே விதிகளின்படி பள்ளி வாகனங்களை வடிவமைக்கின்றன. தமிழகத்தில் பல வாகன வடிவமைப்பு நிறுவனங்கள் இந்த உரிமத்தை பெற்றிருக்கவில்லை. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உரிமம் பெற்ற வாகன வடிவமைப்பு நிறுவனங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இதுதொடர்பாக ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுத்தரப்பில், "மத்திய சாலை போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE