சென்னை: தமிழகத்தில் புதிதாக மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மேலும் ஆற்றில் மணல் எடுக்கும் முறையை இயந்திர முறைக்கு மாற்றவும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நமது ஆறுகளை அழித்துவிடும் என்பதால் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
தமிழகத்தில் கட்டுமானத் துறைக்கான மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கட்டுமானத் துறையில் நிலவும் மணல் பற்றாக்குறையைப் போக்கவும் மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கை வளங்களான ஆற்று மணல், பாறைகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதைத் தடுத்தாலே பெருமளவில் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம்.
» "ஆளுங்கட்சியினரின் மணல் கொள்ளைக்கு ஆதரவாக புதிய குவாரிகளுக்கு அனுமதி" - சீமான் குற்றச்சாட்டு
» "புதிய மணல் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்காது" - அமைச்சர் மெய்யநாதன்
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் 2022 ஏப்ரல் 26ம் தேதி ”Sand and Sustainability: 10 strategic recommendations to avert a crisis” என்கிற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு அரசும் மணலை கட்டுமானத்திற்கு பயன்படும் ஒரு பொருளாக மட்டும் பார்க்காமல் அதன் சூழல் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் சேர்த்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வளமாக பார்க்க வேண்டும் என்றும் மணலுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஆற்று மணலாக இருந்தாலும் மாற்று மணலாக இருந்தாலும் இவை மீள்புதுப்பிக்க முடியாதவை என்பதோடு வரம்புக்குட்பட்டவையும்கூட. தம் உருவாக்கத்துக்கு பலநூறு முதல் பலகோடி ஆண்டுகள்வரையில் எடுத்துக்கொண்ட இத்தகைய வரம்பிற்குட்பட்ட வளங்களை உடனடித் தேவைகளுக்காக முழுமையாக நாம் பயன்படுத்திவிட்டால் அடுத்தத் தலைமுறையினரின் தேவைகளுக்கு எதுவும் மிஞ்சாது. மணலின் பயன்பாட்டையும் தேவையையும் முழுமையாகத் தவிர்க்க முடியாதென்றாலும் இவற்றின் தேவையைக் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும்.
சூழல் நெருக்கடிகளைக் கருத்தில்கொண்டு அரசியல் துணிவுடன் இதற்கான சட்டங்களை உரிய நிபுணர்களைக்கொண்டு வடிவமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, கட்டுமானக் கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்து முழுமையாக மீண்டும் கட்டுமானங்களிலேயே பயன்படுத்துவது, பூச்சு வேலைகள் (Plastering) போன்றவற்றை அவற்றுக்கானக் கட்டாயமற்ற (Ceiling of commercial / institutional / industrial buildings, Compound walls, Interior walls of certain buildings போன்ற) இடங்களில் தவிர்த்தல், லாரிபேக்கர் பாணியிலான சூழலுக்கு இசைவான - இயற்கை வளப்பயன்பாடு குறைந்த கட்டுமான முறைகளை பிரபலப்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு மானியங்கள் வழங்குதல் போன்றவற்றை செயல்படுத்தலாம்.
மேலும், அரசு கட்டிடங்களை வளப்பயன்பாடு குறைந்த மாதிரி கட்டிடங்களாக வடிவமைத்தல், நல்ல நிலையிலிருக்கும் சாலைகளைப் பெயர்த்தோ பெயர்க்காமலோ சாலைகளை அமைப்பதைத் தவிர்த்தல், அத்தியாவசியமற்ற – வெறும் அழகுக்காகவும் பிரம்மாண்டத்துக்காகவும் செய்யப்படும் கட்டுமானங்களைத் தவிர்த்தல், நடைபாதைகள் போன்ற இடங்களில் தேவையற்ற காங்கிரீட் தளங்கள் அமைப்பதைத் தவிர்த்தல், போன்றவற்றை செயல்படுத்தத் தகுந்த நெறிமுறைகளை உருவாக்குவதன் மூலமாக மணல் போன்ற வரம்புள்ள வளங்களின் பயன்பாட்டைக் கணிசமாக குறைக்க முடியும்.
மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் திறப்பதைக் கைவிட வேண்டும் எனவும், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவாரிகளையும் மூடி தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
23 hours ago
தமிழகம்
1 day ago