தேனியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் கைது

By என்.கணேஷ்ராஜ்

கம்பம்: தேனியில் இன்று (மே 9) அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் சாதிக் அலியை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு சாலையைச் சேர்ந்தவர் சாதிக் அலி (39). இவர் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளர் பிரியா தலைமையில் வீட்டில் உள்ள பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சாதிக் அலி

அப்போது சாதிக் அலியின் உறவினர்கள், கட்சியினர், ஜமாத்தைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டனர். சோதனை எதற்காக நடத்தப்படுகிறது என்று கேட்டு கோஷம் எழுப்பினர். சோதனையின் போது கூடலூர் காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணி வரை சோதனை நடைபெற்றது.

சாதிக் அலியிடம் இருந்து 3 மொபைல்போன், கட்சி சார்பில் இயக்கப்படும் இலவச ஆம்புலன்ஸின் ஆவணங்கள் போன்றவற்றை போலீஸார் கைப்பற்றினர். சோதனையின் முடிவில் சாதிக் அலியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE