மணிப்பூரில் இருந்து 5 மாணவர்கள் இன்று இரவு சென்னை வருகை - மீட்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். முதல்வர், 05.05.2023 அன்று பொது மற்றும் மறுவாழ்வுத் துறை அலுவலர்களை இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க மணிப்பூர் மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் உடனடியாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதித்து அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் தமிழக அரசால், அம்மாநில அரசு மற்றும் மணிப்பூர் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்கள் அவர்தம் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் கல்லூரி தேர்வுகளுக்கு தயாராகி வருவதாலும் தற்சமயம் தமிழகத்திகு திரும்பிவர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில் தமிழகத்திற்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ள விருதுநகர் மாவட்டம்-1, தூத்துக்குடி மாவட்டம்-1, திருவள்ளூர் மாவட்டம்- 2, மற்றும் கடலூர் மாவட்டம்-1, என மொத்தம் 5 மாணவர்களை, தமிழகத்திற்கு அழைத்துவர அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூலமாக விமான பயணச் சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாணவர்கள் இன்று(09.05.2023) இரவு சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள். அவர்கள் அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துறையால் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மோரே தமிழ் மக்களுடனும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களது பாதுகாப்பிற்கும் தமிழக அரசால் மணிப்பூர் அரசு மற்றும் தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE