பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிளஸ்-2 தேர்வில் வெற்றிபெற்று வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம்.

வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். திமுக அரசு ‘நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டவே வகுத்திருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள். உலகை வெல்லுங்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் அடுத்தடுத்த நிலைகளுக்கு தங்களை உயர்த்திக் கொண்டு, உச்சங்களைத் தொட வாழ்த்துகள். தேர்வு முடிவுகள் எதுவாயினும், மாணவர்கள் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, சவாலை எதிர்கொள்ள கற்றுக்கொண்டு, வருங்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். தொடர்ந்து உயர் கல்வியில் சேர்ந்து, உச்சத்தை தொட வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெறாதவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றி பெற்று, இந்த ஆண்டே உயர்கல்விப் படிப்பில் சேர்ந்து, சாதனைபுரிய வேண்டும்.

இதேபோல, பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE